மாநில அளவிலான மாநில ரோல்பால் போட்டி; திண்டுக்கல் அணி சாம்பியன்


மாநில அளவிலான மாநில ரோல்பால் போட்டி; திண்டுக்கல் அணி சாம்பியன்
x

திண்டுக்கல்லில் மாநில அளவிலான மாநில ரோல்பால் போட்டியில் திண்டுக்கல் அணி சாம்பியன் வென்றது.

திண்டுக்கல்

சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான மாநில அளவில் ரோல்பால் போட்டிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 32 மாவட்ட அணிகள் கலந்துகொண்டன. லீக் மற்றும் நாக்அவுட் அடிப்படையில் போட்டிகள் நடைபெற்றது. இதில், மாணவிகள் பிரிவில் திண்டுக்கல் மாவட்ட அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இந்தநிலையில் நேற்று இறுதிப்போட்டி நடைபெற்றது. அப்போது திண்டுக்கல் மாவட்ட அணியும், மதுரை மாவட்ட அணியும் மோதின. இதில் திண்டுக்கல் அணி வெற்றிபெற்று, முதலிடத்தை பிடித்ததுடன் சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 2-ம் இடத்தை மதுரை அணியும், 3-ம் இடம் திருச்சி மாவட்ட அணியும், நீலகிரி மாவட்ட அணியும் பிடித்தன. இதேபோல் மாணவர்கள் பிரிவில் இறுதிப்போட்டியில் கடலூர் மாவட்ட அணியும், செங்கல்பட்டு மாவட்ட அணியும் மோதின. இதில் கடலூர் அணி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது. 2-ம் இடத்தை செங்கல்பட்டு அணியும், 3-ம் இடத்தை திண்டுக்கல் மாவட்ட அணியும், கோவை மாவட்ட அணியும் பிடித்தன.

பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இதில், ரோல்பால் சங்கத்தின் தென்னிந்திய செயலாளர் சுப்பிரமணியம், போட்டியின் அமைப்பாளரும், திண்டுக்கல் ரோல்பால் சங்க செயலாளருமான மாஸ்டர் பிரேம்நாத் ஆகியோர் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கினர். இதில், தமிழ் மாநில ரோல்பால் அசோசியேஷன் மாநில செயலாளர் கோவிந்தராஜ், மாநில பொருளாளர் மதுமிதா, மாநில துணைச்செயலாளர் கண்மணி மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story