பஸ் நிலையங்களில் பராமரிப்பின்றி பாலூட்டும் தாய்மார்கள் அறை
பஸ் நிலையங்களில் பராமரிப்பின்றி பாலூட்டும் தாய்மார்கள் அறை
அவசர பயணமாக கைக்குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பத்திற்கு மட்டுமே தெரிந்த வலி, அவசரமாக பசியில் துடிக்கும் குழந்தைக்கு பாலூட்ட அவர்கள்படும் பாடு.
இந்த தாய்மார்களின் தர்ம சங்கடத்தை போக்கத்தான் பஸ்நிலையங்களில் தாய்மார்களுக்கென்று பாலூட்டும் அறைகள் கொண்டு வரப்பட்டன.
அதாவது கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட திட்டம் தான், இந்த சிறப்பான திட்டம். இதற்கு பெண்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது.
பூட்டி கிடக்கும் நிலை
ஆனால் இன்றைக்கு பாலூட்டும் தாய்மார்கள் அறை எந்தவித பராமரிப்பும் இன்றி காணப்படுகிறது. அதே சமயத்தில் கொரோனாவிற்கு பிறகே கடந்த ஆட்சியின் போதே பாலூட்டும் தாய்மார்கள் அறை கவனிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகிறது.
இதனால் பெரும்பாலான பாலூட்டும் தாய்மார்கள் அறை பாராமரிப்பு இன்றி பூட்டிய நிலையில் உள்ளது. சில இடங்களில் இந்த அறையில் வைக்கப்பட்டிருந்த இருக்கைகள் சேதமடைந்த நிலையிலும், துர்நாற்றம் வீசும் வகையில் அசுத்தமாகவும் காட்சி அளிக்கிறது. மேலும் போக்குவரத்து ஊழியர்கள் பயன்படுத்தும் அறையாக மாறி ஆங்காங்கே துணிகள் காயப்போட்டிருக்கும் நிலையை பார்க்க முடிகிறது. இதில் குமரி மாவட்டமும் விதிவிலக்கல்ல.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், குளச்சல், தக்கலை உள்ளிட்ட பல்வேறு பஸ் நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை எவ்வித பயன்பாடும் இன்றி பூட்டி கிடக்கும் அவலநிலை தொடர்கிறது. இதனால் பஸ்நிலையங்களில் கைக்குழந்தைகளுடன் வரும் பாலூட்டும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பெண்களின் நலன் கருதி மீண்டும் பாலூட்டும் தாய்மார்கள் அறைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வேதனை அளிக்கிறது
இதுகுறித்து நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சோ்ந்த உமா மகேஸ்வரி கூறியதாவது:-
கைக்குழந்தைகளுக்கு ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் இடைவெளியில் தாய்ப்பால் கொடுக்க வேண்டியிருக்கும். பஸ்சில் பயணிக்கும் போதோ, பஸ் நிலையங்களிலோ தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதில் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். தாய்மார்களின் கஷ்டத்தை புரிந்து கொண்டு தாய்மை உணர்வோடு தொடங்கப்பட்ட இந்த பாலூட்டும் அறை தற்போது பல்வேறு இடங்களில் பயன்பாடு இன்றி கிடப்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.
சில இடங்களில் உள்ள இந்த அறையில் துர்நாற்றமும், சில இடங்களில் அறையில் வைக்கப்பட்ட மின்விசிறி மற்றும் இருக்கைகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் கைக்குழந்தையுடன் பஸ் நிலையத்திற்கு வரும் பெண்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கும் நிலை உள்ளது. எனவே அனைத்து பஸ் நிலையங்களிலும் கட்டாயம் பாலூட்டும் தாய்மார்கள் அறைகளை மீண்டும் பராமரித்து நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும். அதில் சுத்தமான குடிநீர் வசதி, அவசர கால சிகிச்சைக்காக மருந்துகள் மற்றும் ஒரு நர்சு ஆகியோரும் இடம் பெறச்செய்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்
மீண்டும் திறக்க நடவடிக்கை...
நாகர்கோவில் வெள்ளமடத்தை சேர்ந்த சுபாஷினி கூறியதாவது:-
வெளியூர்களுக்கு செல்ல வேண்டிய வேளையில் பஸ் நிலையத்தில் பெண்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நிலை இருந்தால் ஒருவித தயக்கத்துடன் இருக்க வேண்டிய நிலை இருக்கும். அவற்றை போக்கும் வகையில் தொடங்கப்பட்ட இந்த பாலூட்டும் தாய்மார்கள் அறை பல்வேறு இடங்களில் பூட்டி கிடக்கிறது. சில இடங்களில் பயன்பாடு இன்றி கிடப்பதும் வேதனைக்குரிய செயலாகும். எனவே மீண்டும் இந்த அறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.8 கோடி ஒதுக்கீடு
இதுதொடர்பாக நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் மாநகரில் வடசேரி பஸ் நிலையம், ஆம்னி பஸ் நிலையம் மற்றும் அண்ணா பஸ் நிலையம் ஆகியவற்றில் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை செயல்பாட்டில் இருந்து வந்தது. தற்போது சில காரணங்களால் பாலூட்டும் தாய்மார்கள் அறைகள் செயல்படாத வண்ணம் உள்ளது. இந்த 3 பஸ் நிலையங்களையும் சீரமைத்து மேம்படுத்தும் பணிக்காக மொத்தம் ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பாலூட்டும் அறைகளை மீண்டும் பராமரித்து பல்வேறு அடிப்படை வசதிகளுடன் செயல்படுத்திடவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளன. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.
எது எப்படியோ மக்களின் வசதிக்காக கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்கள் தொடர்வதன் மூலம் அது மக்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். எனவே, பூட்டிக்கிடக்கும் பாலூட்டும் தாய்மார்கள் அறைகளை மீண்டும் புதுப்பொலிவுடன் திறக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது.