பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
வருடாந்திர பராமரிப்பு பணிக்காக, பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை 45 நாட்கள் நிறுத்தப்படுகிறது.
ரோப்கார் சேவை
அறுபடை வீடுகளில் 3-ம்படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநில மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர்.
குறிப்பாக விழாக்காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள், பழனி மலைக்கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்வது வழக்கம். இவ்வாறு வருகிற பக்தர்கள் வசதிக்காக மின் இழுவை ெரயில், ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் பெரும்பாலான பக்தர்கள், ரோப்கார் சேவையையே பயன்படுத்தி வருகின்றனர். தெற்கு கிரிவீதியில் உள்ள ரோப்கார் நிலையத்தில் இருந்து, மலைக் கோவிலுக்கு செல்லும்போது இயற்கை அழகை ரசித்தபடி செல்வதால் பெரும்பாலான பக்தர்கள் ரோப்கார் சேவையை விரும்புகின்றனர். இதற்காக பக்தர்களிடம் ரூ.50 வசூலிக்கப்படுகிறது.
பராமரிப்பு பணிகள்
தினமும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை ரோப்கார் இயக்கப்படுகிறது. தினசரி பராமரிப்பு பணிக்காக, மதியம் 1.30 மணி முதல் 2.30 மணி வரை ரோப்கார் நிறுத்தப்படும்.
இதேபோல் மாதத்துக்கு ஒரு முறையும், வருடத்துக்கு 45 நாட்களும் ரோப்காரில் பராமரிப்பு மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ரோப்கார் பராமரிப்பு பணி நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
அடுத்த மாதம் (ஜூலை) 30-ந்தேதி வரை பணி நடைபெறுகிறது. இந்த நாட்களில் ரோப்கார் சேவை நிறுத்தப்படுகிறது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணியின்போது, ரோப்கார் பெட்டிகள் கட்டப்பட்டு முக்கிய பாகங்கள் பரிசோதனை செய்யப்படும். ஏதேனும் பாகங்களில் பழுது ஏற்பட்டு இருந்தால், அதனை உடனடியாக அகற்றி விட்டு புதிதாக பொருத்தப்பட உள்ளது.
அதன்பிறகு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு, பக்தர்கள் சேவைக்காக மீண்டும் ரோப்கார் இயக்கப்படும். பராமரிப்பு பணி எதிரொலியாக,பழனிக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவோ அல்லது மின் இழுவை ெரயில் மூலமாகவோ மலைக்கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.