நான்கு சாலைகள் சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்படுமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு


நான்கு சாலைகள் சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்படுமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 17 Dec 2022 9:36 PM IST (Updated: 17 Dec 2022 10:00 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே நான்கு சாலைகள் சந்திப்பில் தொடரும் விபத்துகளை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தேனி

தேனி அருகே நான்கு சாலைகள் சந்திப்பில் தொடரும் விபத்துகளை தடுக்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

புறவழிச்சாலை

திண்டுக்கல்-குமுளி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட்டது. பின்னர், நான்கு வழிச்சாலைக்கு பதிலாக இருவழி புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இதற்கான பணிகள் பெரும் அளவில் நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த சாலை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தேனி அருகே பூதிப்புரத்தில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்ததால் மதுராபுரியில் இருந்து போடி சாலை சந்திப்பு வரை போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்தது. இந்த பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்ததை தொடர்ந்து சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கடந்த மாதம் இந்த சாலை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது. தற்போது தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் சென்று வருகின்றனர்.

நான்கு சாலைகள் சந்திப்பு

தேனி அருகே ஆர்.எம்.டி.சி. நகர் பகுதியில் திண்டுக்கல்-குமுளி சாலையும், தேனி-போடி சாலையும் சந்திக்கிறது. தேனி-போடி சாலையானது கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் ஓர் அங்கம் ஆகும். தேசிய நெடுஞ்சாலைகள் ஒன்றுக்கு ஒன்று சந்திக்கும் இந்த இடத்தில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. நான்கு சாலைகள் சந்திக்கும் இந்த பகுதியில், திண்டுக்கல்-குமுளி சாலை திறக்கப்படும் முன்பே விபத்துகள் ஏற்பட்டு வந்தன. அந்த சாலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் விபத்துகள் மேலும் அதிகரித்தன.

உள்ளூர்வாசிகளுக்கு இந்த நான்கு சாலைகள் சந்திப்பு இருப்பது தெரியும் என்பதால் அவர்கள் கவனமுடன் பயணம் செய்யப் பழகி வருகின்றனர். அதே நேரத்தில், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இப்படி ஒரு சாலை சந்திப்பு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். குறிப்பாக திண்டுக்கல்-குமுளி சாலையில் அசுர வேகத்தில் வரும் வாகனங்களே விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.

அதிகரிக்கும் விபத்துகள்

நாள்தோறும் விபத்து நடக்கும் இடமாக இது மாறியுள்ளது. சில விபத்துகளுக்கு வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. சிறு, சிறு விபத்துகளில் காயம்பட்டவர்கள் அவர்களாகவே தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்புகின்றனர். வாகன விபத்துகள் அதிகரித்து வருவதால் தற்காலிகமாக வேக தடுப்புகள் வைத்து விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தேனி-போடி சாலையில் ஒளிரும் பட்டைகள், பட்டையான மஞ்சள் கோடுகளால் ஆன அடுக்கு வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் வாகன விபத்துகள் அடிக்கடி நடப்பதால், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள போலீசார் தரப்பிலும், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகளுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இங்கு விபத்து தடுப்பு நடவடிக்கையாக மேம்பாலம் அமைக்க வேண்டும். அல்லது சாலைகள் சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

போலீசார் கடிதம்

பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையம் சார்பில் அனுப்பப்பட்ட பரிந்துரை கடிதத்தில், "இந்த நான்கு சாலைகள் சந்திப்பு பகுதியில் போதிய விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாலையை மறைக்கும் வகையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, வாகன ஓட்டிகளுக்கு எதிரே மற்றும் பிற சாலைகளில் இருந்து வாகனங்கள் வருவதை தெரியும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். முழுமை பெறாமல் உள்ள பணிகளை துரிதமாக நிறைவு செய்ய வேண்டும். மாரியம்மன்கோவில்பட்டி, பழனிசெட்டிபட்டி இடையே புறவழிச்சாலை மேடாகவும், இரு ஊர்களுக்கான இணைப்புச் சாலை பள்ளமாகவும் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். அதையும் சரி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

அதுபோல், தேனி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இருந்தும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகளுக்கு ஒரு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தியிடம் கேட்டபோது, "நான்கு சாலைகள் சந்திப்பு பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். அங்கு பாலம் அல்லது ரவுண்டானா அமைத்தால் விபத்துகளை தவிர்க்க முடியும். இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் துறை சார்பில் பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளோம்" என்றார்.

பாலம் அல்லது ரவுண்டானா

இங்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து பொதுமக்கள் சிலர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

அருள்குமார் (இறைச்சி வியாபாரி, பழனிசெட்டிபட்டி):- தேனியில் நான்கு சாலைகள் சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதனால், அந்த சாலை வழியாக செல்லவே அச்சமாக உள்ளது. தினமும் இந்த சாலையில் சென்று வந்தேன். சில விபத்துகளை நேரில் பார்த்தேன். அதில் இருந்து புறவழிச்சாலையில் செல்வதை தவிர்த்து முத்துத்தேவன்பட்டி வழியாக சென்று வருகிறேன். இங்கு மேம்பாலம் அமைத்தால் மட்டுமே விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.

சுந்தரம் (பல்கலைக்கழக பேராசிரியர், சிலமலை):- நான் பணி நிமித்தமாக அடிக்கடி இந்த சாலையை கடந்து சென்று வருகிறேன். இது ஆபத்தான சாலையாக உள்ளது. இங்கு ரவுண்டானா அமைத்தால் விபத்துகளை தவிர்க்கலாம். இருசக்கர வாகன ஓட்டிகளும் சாலையை பாதுகாப்பாக கடந்து செல்ல வசதியாக இருக்கும். தற்போதைய சூழலில் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிக அளவில் இந்த வழியாக செல்வதால் இரவு நேரங்களில் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

கணேசன் (தேனி):- நான் நான்கு சாலைகள் சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு கட்சி அலுவலகத்தில் தான் வேலை பார்க்கிறேன். இங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. விபத்தில் உயிர் இழப்பும் ஏற்படுகிறது. விபத்து ஏற்பட்டால் உடனடியாக சென்று போலீசாருக்கு தகவல் தெரிவிப்பேன். அடிக்கடி தகவல் தெரிவித்து வருவதால், இங்கு ஏதாவது விபத்து நடந்தால் போலீசாரும், உளவுத்துறையினரும் எனது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு விபத்து குறித்து விசாரிக்கின்றனர். பல முறை நானே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து காயம் பட்டவர்களை ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளேன். குழந்தைகள், பெண்கள் என பலதரப்பினரும் விபத்தில் சிக்குவதை பார்க்கும் போது மனம் வேதனையாக இருக்கிறது. இங்கு விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேம்பாலம் அமைக்கவோ, தற்காலிகமாக ரவுண்டானா அமைக்கவோ அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story