ரவுடி மர்ம சாவு
கடையநல்லூரி்ல் ரவுடி மர்மமாக இறந்தார்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கொல்லி மாடசாமி (வயது 55). இவர் மீது கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருடைய பெயர் ரவுடிகள் பட்டியலில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இவரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் இவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
தற்போது ஜாமீனில் வெளிவந்து குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்திருந்த அவர் நள்ளிரவில் திடீரென வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
நேற்று காலையில் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது அப்பகுதியில் உள்ள உடை மரம் அருகே அவர் பிணமாக கிடந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொல்லி மாடசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.