தொழிலாளியிடம் ரூ.1¼ லட்சம் 'அபேஸ்'


தொழிலாளியிடம் ரூ.1¼ லட்சம் அபேஸ்
x

நிலக்கோட்டையில், வங்கி முன்பு கவனத்தை திசை திருப்பி தொழிலாளியிடம் ரூ.1¼ லட்சம் அபேஸ் செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்

ரூ.1¼ லட்சம்

நிலக்கோட்டை அருகே உள்ள கரியாம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 50). கூலித்தொழிலாளி. நேற்று இவர், தனது மகனின் திருமண செலவுக்காக நகைகளை அடகு வைக்க நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

வங்கி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர் வங்கியில் நகைகளை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை பாண்டி, ஒரு பையில் வைத்து மோட்டார் சைக்கிள் நிறுத்தி இருந்த இடத்துக்கு வந்தார்.

கவனத்தை திசை திருப்பி...

அப்போது அங்கு 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் பாண்டியிடம், கீழே 500 ரூபாய் நோட்டுகள் விழுந்து கிடப்பதாகவும், அது தங்களுடையதா என்று பார்க்கும்படியும் கூறினர். இதனையடுத்து அவர் தன் கையில் பணம் வைத்திருந்த பையை மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டு, கீழே கிடந்த ரூபாய் நோட்டுகளை எடுக்க முயன்றார்.

அந்த சமயத்தில் பாண்டியிடம் இருந்த பணப்பையை 'அபேஸ்' செய்து விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி சென்று விட்டனர். இதற்கிடையே கீழே கிடந்த ரூ.3 ஆயிரத்தை எடுத்துவிட்டு பார்த்தபோது, தன்னுடைய பணப்பை காணாமல் போனதை அறிந்து பாண்டி அதிர்ச்சி அடைந்தார்.

பணத்தை சிதற விட்டு, பாண்டியின் கவனத்தை திசை திருப்பி மர்ம நபர்கள் கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது. இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் பாண்டி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story