வாலிபரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி
சிங்கப்பூரில் வேலை வாங்கித்தருவதாக கூறி வாலிபரிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
விழுப்புரம் அருகே உள்ள துலுக்கநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சாதிக்பாஷா (வயது 35). இவர் வெளிநாட்டில் வேலை வேண்டி ஒரு இணையதள முகவரியில் தனது விவரங்களை பதிவுசெய்து வைத்திருந்தார். இந்த சூழலில் கடந்த 18.4.2022 அன்று மர்ம நபர் ஒருவர், வேறொரு இணையதள முகவரியில் இருந்து அவரது இணையதள முகவரிக்கு சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை தருவதாக கூறி குறுந்தகவல் அனுப்பியிருந்தார். அந்த குறுந்தகவலில் ஆன்லைன் மூலம் நேர்காணல் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் சாதிக்பாஷாவை செல்போனில் தொடர்புகொண்டு பேசியநபர், தான் சிங்கப்பூரிலிருந்து பேசுவதாக கூறியதோடு அவரிடம் ஆன்லைன் மூலம் நேர்காணல் நடத்துவதுபோன்று நடத்தி பணியில் சேர சர்வீஸ் கட்டணம், பாதுகாப்பு கட்டணம், விசா, இன்சூரன்ஸ் ஆகியவற்றிற்காக பணம் கட்டுமாறு கூறினார். இதை நம்பிய சாதிக்பாஷா, தனது வங்கி கணக்கிலிருந்து இன்டர்நெட் பேங்கிங் மூலமாக அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 7 தவணைகளாக ரூ.99,980-ஐ அனுப்பியுள்ளார். பணத்தை பெற்ற அந்த நபர், இதுநாள் வரையிலும் சாதிக்பாஷாவிற்கு சிங்கப்பூரில் வேலை ஏதும் வாங்கித்தராமலும், பணத்தை திருப்பித்தராமலும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து சாதிக்பாஷா, விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.