தமிழ் அறிஞர் நன்னன் மனைவிக்கு ரூ.10 லட்சம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ் அறிஞர் நன்னனின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதை தொடர்ந்து அவரது மனைவிக்கு நூலுரிமை பரிவுத்தொகை ரூ.10 லட்சத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அவர்களின் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 173 தமிழ் அறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு மரபுரிமையர்களுக்கு ரூ.13.87 கோடி நூலுரிமைத் தொகை அரசால் வழங்கப்பட்டு உள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து இதுவரை சிலம்பொலி செல்லப்பன், பரமசிவன், இளங்குமரனார், முருகேச பாகவதர், சங்கரவள்ளி நாயகம், ராசு, பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், நெல்லை திவான், விடுதலை ராஜேந்திரன், மம்மது, நெல்லை கண்ணன், கந்தர்வன் என்கிற நாகலிங்கம், சோமலே, ராசையா, தஞ்சை பிரகாஷ் ஆகிய 16 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு ரூ.2.40 கோடி நூலுரிமைத் தொகையாக வழங்கப்பட்டு உள்ளது.
நூலுரிமைத் தொகை
30.7.2023 அன்று சென்னை, சர்.பிட்டி தியாகராயர் கலை மன்றத்தில் நடைபெற்ற பேராசிரியர் மா.நன்னனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 'தமிழ்நாடு அரசு சார்பில் நன்னனுக்கு புகழ் சேர்க்கிற வகையில் அவரது புத்தகங்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்பதை அறிவிக்கிறேன். யாரும் இதற்கான கோரிக்கைகளை வைக்கவில்லை என்றாலும், நன்னன் குடியில் நானும் ஒருவன் என்ற அடிப்படையில், இந்த அறிவிப்பை செய்திருக்கிறேன்' என்று தெரிவித்தார்.
அதன்படி, நன்னன் எழுதிய நூல்கள், கருத்துக் கருவூலங்கள், உலக மக்களை எளிதில் சென்றடையும் வகையில் அவரின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, நூலுரிமை பரிவுத் தொகையான ரூ.10 லட்சத்துக்கான காசோலையை நன்னனின் துணைவியார் பார்வதி அம்மாளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
அப்போது நன்னனின் மகள் அவ்வை, முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 'நன்னனுக்கு நூற்றாண்டு நிறைவு, நிறை வாழ்வு வாழ்ந்த நன்னனுக்கு, நான் வந்து வாழ்த்துகிறேன் என்று நிறைவான விழாவாக்கிய முதல்-அமைச்சரே' என்ற கவிதையை வாசித்தார்.