கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி: அமைச்சர் பொன்முடி தகவல்


கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி: அமைச்சர் பொன்முடி தகவல்
x

கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை,

உயர்கல்வித்துறை வளர்ச்சி குறித்தும், அதனை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கடந்த வாரத்தில் உயர் அதிகாரிகளுடன், உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர்களுடன் அது தொடர்பாக சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 325 இடங்களில், 1 லட்சத்து 31 ஆயிரத்து 173 இடங்கள் நிரம்பி இருக்கின்றன. இதில் கணிதம் பாடத்தில் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். அதற்கேற்றாற்போல் பாடத்திட்டங்களை மாற்ற உள்ளோம்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் கூறியதுபோல், வேலைவாய்ப்பு பயிற்சியை கல்லூரிகளில் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம்.

என்ன குறை இருக்கிறது?

கல்லூரிகளுக்காக ஒரே ஆண்டில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கான ஆணை வெளியிடப்பட்டு இருக்கிறது. விரைவில் தேர்வு நடத்தப்பட்டு அவர்கள் நியமிக்கப்படுவார்கள். மீதம் உள்ள காலி இடங்களில் தகுதியுள்ள 1,895 கவுரவ விரிவுரையாளர்கள் உரிய விதிகளின் அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர். கவுரவ விரிவுரையாளர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வை எதிர்கொள்வதற்கு என்ன குறை இருக்கிறது? அவர்கள் ஆசிரியர்கள்தானே.?

கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டதும் அங்கு ஆசிரியர்கள் இல்லாத நிலை கண்டிப்பாக நீங்கும். கல்லூரி பாடத்திட்டங்களை மாற்றுவது குறித்தும் கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தில் கலந்து பேசியுள்ளோம். இதனைத்தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆய்வுக் கூட்டம் வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது.

முதல்-அமைச்சர் விரும்புவது போல, உயர்கல்வித்துறை அவருடைய ஆட்சி காலத்தில் பொற்காலமாக அமையும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை என்ற குறை இருக்கக்கூடாது என்று முதல்-அமைச்சர் கூறியிருக்கிறார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

ரூ.1,000 கோடி

கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி முதல்-அமைச்சர் ஒதுக்கி இருக்கிறார். அதன்படி, எந்தெந்த கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்? என்பது குறித்து கருத்துகளை கேட்டு வருகிறோம். அந்த பிரச்சினைகளை வருகிற காலத்தில் சரிசெய்வோம்.

தற்போது கலைக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கான முதல் செமஸ்டர் தேர்வை தாமதமாக நடத்த கூறியிருக்கிறோம். காரணம், ஒரு மாணவர் 50 சதவீத வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே செமஸ்டர் தேர்வை எழுத முடியும். அந்த வகையில் மாணவர் சேர்க்கை தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வருவதால், இந்த முடிவை எடுத்துள்ளோம்.

யார் எழுதி கொடுக்கிறார்கள்?

என்ஜினீயரிங் படிப்பில் தமிழ் வழிக்கல்வி கொண்டு வரவேண்டும் என்று உள்துறை மந்திரி, மத்திய இணை மந்திரி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஆகியோர் பேசி வருகிறார்கள். இவர்களுக்கு யார் தான் இப்படி பேச வேண்டும் என்று எழுதிக் கொடுக்கிறார்களோ? தெரியவில்லை.

என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2010-ம் ஆண்டில் இருந்தே சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளை தமிழ் வழியில் கற்க வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். இப்போது எலக்ட்ரானிக்ஸ் படிப்பும் தமிழ் வழியில் வந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து என்ஜினீயரிங் கல்லூரிகளில் தமிழர் பண்பாடு, தமிழரும், தொழில்நுட்பமும் என்ற பெயரில் தமிழ் பாடங்களை கொண்டுவந்துள்ளோம். அரசு கலைக் கல்லூரிகளிலும் தமிழ் வழி கல்வி வழங்கப்பட்டு வருவதோடு, அதனை படிக்க உதவித்தொகையையும் வழங்கி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story