மகளிருக்கு மாதம் ரூ.1000 - பணிகள் துவக்கம்..!
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
சென்னை,
தி.மு.க. சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், 'பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும்' என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. தி.மு.க. அரசு அமைந்த பின்னர், இந்த திட்டம் எப்போது தொடங்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு இல்லத்தரசிகள் மத்தியில் அதிகரித்தது.
இதற்கிடையே தமிழ்நாடு அரசு கடந்த 2023-24-ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில், இந்த திட்டத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டம் அண்ணா பிறந்தநாளான வருகிற செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ரூ.1,000 கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
பயனாளிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகள் கண்டறியப்பட்டுள்ளன .
குடும்ப அட்டை எண்ணிக்கையின் அடிப்படையில் பள்ளிகள், சமுதாய கூடங்கள், அரசு அலுவலகங்கள், இரவு காப்பகங்கள் என தேவையான முகாம்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
முகாம்கள் நடைபெறும் இடங்களில் குடிநீர், மின்விசிறி, இருக்கைகள், சாய்வு நடைபாதை, முதலுதவிப் பெட்டி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன தேவையான இடங்களில் பந்தல்கள், மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் போன்றோருக்கு தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.