தேவகோட்டை தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: விதிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்காத தாசில்தார்களுக்கு அபராதம் விதிக்கப்படும் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை


தேவகோட்டை தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: விதிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்காத தாசில்தார்களுக்கு அபராதம் விதிக்கப்படும் - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை
x

தேவகோட்டை தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: விதிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்காத தாசில்தார்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தது

மதுரை


சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த மதியாரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தேவகோட்டை பகுதியில் நான் நில ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தேவகோட்டை தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். என் மீதான உள்நோக்கத்தில் இது போல நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவ்வாறு ஆக்கிரமிப்பு செய்திருந்தாலும், நில ஆக்கிரமிப்பு சட்டப்படி உரிய விதிமுறைகளை பின்பற்றி என் மீது நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.

ஆனால் விதிகளை பின்பற்றாமல் எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். எனவே நில ஆக்கிரமிப்பு சட்டப்படி உரிய விதிமுறைகளை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவகோட்டை தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், தமிழகத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உரிய சட்ட விதிமுறைகளை தாசில்தார்கள் முறையாக பின்பற்றுவதில்லை. தாசில்தார்களின் இதுபோன்ற செயல்கள் ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவே அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் இதுபோன்ற செயல்கள்தான் தொடர்ந்து வருகின்றன.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை எனில் இனிவரும் காலங்களில் கோர்ட்டில் இது போன்ற வழக்குகள் தொடரப்பட்டால் சம்பந்தப்பட்ட தாசில்தாருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

பின்னர், உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் மனுதாரருக்கு தாசில்தார் அனுப்பிய நோட்டீஸ் உள்ளிட்ட நடவடிக்கைகளை ரத்து செய்கிறோம். இதற்காக தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த அபராத தொகையை செல்லமுத்து அறக்கட்டளைக்கு செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story