'ஹிஜாவு' நிதி நிறுவனம் ரூ.1,046 கோடி மோசடி: தலைமறைவானவர்கள் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்


ஹிஜாவு நிதி நிறுவனம் ரூ.1,046 கோடி மோசடி: தலைமறைவானவர்கள் குறித்து தகவல் அளித்தால் சன்மானம்
x

‘ஹிஜாவு' நிதி நிறுவன மோசடி வழக்கில் தலைமறைவாக உள்ள 15 பேரின் புகைப்படங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டனர். இவர்கள் குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவித்து உள்ளனர்.

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கத்தில் 'ஹிஜாவு அசோசியேட்ஸ் பிரைவேட் லிமிடேட்' நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் மாதந்தோறும் 15 சதவீதம் வட்டித்தொகை வழங்கப்படும் என்று கவர்ச்சி அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான நபர்கள் இந்த நிறுவனத்தில் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்தார்கள்.

ஆனால் இந்த நிறுவனம் முதலீட்டாளர்களை ஏமாற்றியது. வட்டி தொகை, முதலீடு செய்த பணத்தை முதலீட்டாளர்களுக்கு திரும்ப தராமல் இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் உள்ளிட்டோர் மோசடியில் ஈடுபட்டனர். பணத்தை இழந்த பொதுமக்கள் சென்னை அசோக்நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்துக்கு திரண்டு வந்து புகார்கள் அளித்தனர்.

அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கு தொடர்பாக இந்த நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகளின் இல்லங்கள், அலுவலகங்கள் என 42 இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதில் சிக்கிய ஆதாரங்கள் அதனடிப்படையில் இந்த நிறுவனம் சுமார் 14 ஆயிரத்து 126 பேரிடம் ரூ.1,046 கோடி பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.

15 பேர் தலைமறைவு

இதைத்தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட இந்த நிதி நிறுவனத்தை சேர்ந்த இயக்குனர்கள், துணை இயக்குனர்கள் உள்ளிட்டோர் மீது மோசடி வழக்குப்பாய்ந்தது. இந்த வழக்கில் குற்றம் சட்டப்பட்ட அனைவரும் தலைமறைவு ஆனார்கள். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் சவுந்தரராஜன், கலைச்செல்வி, ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்த நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர், அவரது மனைவி மகாலட்சுமி, இனயா, கோவிந்தராஜீலு, சுஜாதா காந்தா, ரமேஷ், சுரேந்திரகுமார், முத்துகுமரன், முரளிதரன், ரமேஷ், சுரேந்திரகுமார், முரளிதரன், சாமி சேகர் என்கிற காலேப் சேகர், ராம்ராஜ், ஜெயக்குமார், ஜெயசஞ்சுலு, துரைராஜ், ப்ரீஜா ஆகிய 15 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். இதில் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தகவல் தந்தால் பரிசு

இந்த நிலையில் தலைமறைவு குற்றவாளிகளின் படங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டு உள்ளனர். இவர்கள் பற்றி தகவல் தெரிந்தால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றும், உறுதியான தகவலாக இருந்தால் தக்க சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story