பல்வேறு நிறுவனங்களில் நூல் வாங்கி ரூ.12 லட்சம் மோசடி
பல்வேறு நிறுவனங்களில் நூல் வாங்கி ரூ.12 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பல்வேறு நிறுவனங்களில் நூல் வாங்கி ரூ.12 லட்சம் மோசடி செய்து தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
1,800 கிலோ நூல்
ஈரோடு அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 36). இவர் நூற்பாலை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய ஆலையில், ஈரோட்டில் கணபதி டிரேடர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வரும், தர்மபுரி மாவட்டம் பர்கூரை சேர்ந்த மணிகண்டன் (32) தொடர்பு கொண்டு ரூ.2 லட்சத்து 80 ஆயிரத்து 665 மதிப்பிலான 1,800 கிலோ நூல் ஆர்டர் செய்துள்ளார். இதைத்தொடர்ந்து பாலமுருகன் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி நூல் வழங்கி உள்ளார்.
இதற்காக நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் நூலுக்கான தொகையை வங்கி காசோலையாக கொடுத்துள்ளனர். ஆனால், அவர்களின் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் காசோலை திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளரான மணிகண்டனை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
3 பேர் கைது
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலமுருகன் இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசில் கடந்த 7-ந்தேதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இதேபோல் மணிகண்டன் பல்வேறு நிறுவனங்களில் ரூ.9 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான நூலை வாங்கி மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடந்த 10-ந்தேதி கணபதி டிரேடர்சில் பணியாற்றிய பவானியை சேர்ந்த சண்முகம் (55), மதிவாணன் (40), பாலா (60) ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மணிகண்டன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டன், ஈரோடு வெட்டுக்காட்டுவலசை சேர்ந்த சுப்பிரமணி மகன் பிரபுக்குமார் (47), ஈரோடு குமலன்குட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் (38) ஆகிய 3 பேரையும் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று கைது செய்தனர். கைதான 3 பேரும் இதேபோல் பல நிறுவனங்களில் ஸ்டார்ச் மாவு, அரிசி மூட்டைகள், பாமாயில் போன்றவற்றை கொள்முதல் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.