தொழில் அதிபர் வீட்டில் ரூ.12 லட்சம் நகைகள் கொள்ளை
தானிப்பாடி அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நகைகள், ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர். மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தண்டராம்பட்டு
தானிப்பாடி அருகே தொழில் அதிபர் வீட்டில் ரூ.12 லட்சம் மதிப்பிலான நகைகள், ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளனர். மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பதியில் சாமி தரிசனம்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தானிப்பாடி அருகில் உள்ள போந்தை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னதண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 42). தொழில் அதிபரான அவர் திருப்பூர் பகுதியில் நெசவுத்தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் தனது குடும்பத்தினருடன் 17-ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று அதிகாலை சின்னதண்டாவில் உள்ள வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு இருந்தது.
பீரோ மற்றும் கட்டில் பகுதியில் வைத்திருந்த நெக்லஸ், கைச்செயின், வளையல்கள் என மொத்தம் 31 பவுன் நகைகளும், ரூ.3 ஆயிரத்தையும் காணவில்லை. மர்மநபர்கள் யாரோ கொள்ளையடித்துச் சென்று விட்டனர். கொள்ளைப்போன நகைகளின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.
போலீஸ் வலைவீச்சு
இதுகுறித்து சங்கர் தானிப்பாடி போலீசில் புகார் செய்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, கைரேகை நிபுணர் சுந்தரராஜன், போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி, கைரேகையை பதிவு செய்து, தடயங்களை சேகரித்தனர்.
மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நகை, பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் 4 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.