ரூ.12 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி: தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது-அமைச்சர் கே.என்.நேரு பேச்சு


ரூ.12 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி: தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது-அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
x

தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்படுகிறது என்றும், ரூ.12 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என்றும் சேலத்தில் நடந்த கூட்டுறவு வாரவிழாவில் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சேலம்

கூட்டுறவு வாரவிழா

சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சேலம் அழகாபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சமுதாய கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ரவிக்குமார் வரவேற்றார்.

எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், சின்ராஜ், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் ராஜேந்திரன், அருள், சதாசிவம், துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மாவட்ட அளவிலான சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களையும், பல்வேறு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ரூ.12 ஆயிரம் கோடி தள்ளுபடி

கடந்த 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய ரூ.7 ஆயிரம் கோடி கடனை முதல்-அமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்ற உடன் தள்ளுபடி செய்தார். அவரை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் சிறப்பாக ஆட்சி புரிந்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய சுமார் ரூ.12 ஆயிரம் கோடி விவசாய கடனையும் தள்ளுபடி செய்துள்ளார்.

ஆனால் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதுபற்றி முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றவுடன் அவர் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ.538 கோடி கடனையும் தள்ளுபடி செய்தார்.

விவசாயிகளுக்கு கடனுதவி

கடந்த ஆட்சியில் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டதா? என்று நான் கூற விரும்பவில்லை. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கூட்டுறவுத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகளின் தலைமை வங்கியில் ரூ.2 ஆயிரம் கோடி இருப்பு இருக்கக்கூடிய அளவிற்கு கூட்டுறவுத்துறை வளர்ச்சி அடைந்து சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகளுக்கு கடனுதவி, பயிர்க்கடன், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி என பல்வேறு தரப்பினருக்கும் கூட்டுறவுத்துறை மூலமாக பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பொதுமக்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறார்கள்.

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

நலத்திட்ட உதவிகள்

இதைத்தொடர்ந்து 2,876 பயனாளிகளுக்கு ரூ.25 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். பின்னர் அவர் ரேஷன் கடைகள் மூலம் 5 கிலோ சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். மேலும், கூட்டுறவு நிறுவனங்களில் பணியில் இருந்தபோது இறந்த 12 பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி ஆணைகளை வழங்கினார்.

விழாவில், மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் மீராபாய், சேலம் சரக துணைப்பதிவாளர் முத்துவிஜயா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சமுதாய வளைகாப்பு விழா

முன்னதாக சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா சேலம் 5 ரோட்டில் உள்ள இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இதில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு 150 கர்ப்பிணிகளுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வளையல், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட சீர்வரிசை தாம்பூலங்கள் மற்றும் 5 வகை உணவுகளை வழங்கினார்.

விழாவில் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகள் திட்ட அலுவலர் பரிமளா தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story