அரசு மருத்துவமனையில் நர்சு வேலை வாங்கித்தருவதாக ரூ.13 லட்சம் மோசடி


அரசு மருத்துவமனையில் நர்சு வேலை வாங்கித்தருவதாக ரூ.13 லட்சம் மோசடி
x

ஆம்பூர் அருகே அரசு மருத்துவமனையில் நர்சு வேலை வாங்கித்தருவதாகக்கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே அரசு மருத்துவமனையில் நர்சு வேலை வாங்கித்தருவதாகக்கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

நர்சு வேலை

ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹேமலதா. இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர்களது உறவினரான வாணியம்பாடி பகுதியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் அருண்குமார் ஆகியோர் கடந்த வருடம் ரமேஷ் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது ரமேஷிடம், அவரது மனைவி என்ன வேலை செய்கிறார் என்று கேட்டு, அவருக்கு அரசு மருத்துவமனையில் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஜெய்லபுதீன் என்பவர் மூலம் நர்சு வேலை வாங்கித் தருவதாதக கூறி உள்ளனர்.

ரூ.13 லட்சம் பெற்றனர்

ஜெய்லபுதீன் அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர் ஹேமலதாவுக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நர்சு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி அதற்காக ரூ15 லட்சம் செலவாகும் எனவும் கூறி இருக்கின்றனர்.

முதல் தவணையாக ரூ.1½ லட்சம் கேட்டுள்ளனர். அதன்படி ரமேஷ் ரூ.1½ லட்சம் கொடுத்துள்ளார். மேலும் அடுத்தடுத்து மொத்தமாக ரூ.13 லட்சம் பெற்று இருக்கின்றனர்.

பின்னர் வேலைக்கான ஆணை தயாராக உள்ளதாகவும், அதற்காக மீதமுள்ள தொகையை கொடுக்குமாறும் கேட்டுள்ளனர். அதற்கு அரசு வேலைக்கான ஆணையை வழங்கினால் தருகிறோம் என கூறியுள்ளனர். அதன் பின்னர் வாட்ஸ் அப் மூலமாக பணி ஆணை ஒன்றை அவருக்கு அனுப்பி உள்ளனர்.

5 பேர் கைது

அதை பார்த்தபோது அது போலி பணி ஆணை என்பது தெரிய வந்தது. இது குறித்து ஹேமலதா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் உமராபாத் போலீசார் வழக்குப்பதிவுசெய்து நர்சு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட வாணியம்பாடி பகுதியை சேர்ந்த ஜெய்லபுதீன் (41), சிவகுமார் (48), அருண்குமார் (34), முனவர் பாஷா (54) ரபீக் அஹமத் ஆகிய 5 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story