கார் பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி
கார் பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார் பரிசு விழுந்ததாக கூறி வாலிபரிடம் ரூ.14 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கார் பரிசு
கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 25). இவருடைய வீட்டு முகவரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தபால் ஒன்று வந்தது. அதில் ஒரு பரிசு கூப்பனும், ஒரு கடிதமும் இருந்துள்ளது. அஜித் குமார் அந்த கூப்பனை திறந்து பார்த்தபோது கார் பரிசு விழுந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. கடிதத்தை திறந்து வாசித்தபோது அதில் உங்களுக்கு கார் பரிசாக விழுந்துள்ளது எனவும், மேலும் இது பற்றி விவரம் அறிய கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை உண்மை என நினைத்த அஜித்குமார் கடிதத்தில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். அதில் பேசிய நபர் பரிசு கூப்பனை போட்டோ எடுத்து அந்த கடிதத்தில் இருந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்ப சொன்னார். அதன்பேரில் அஜித் குமார் பரிசு கூப்பனை போட்டோ எடுத்து அந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பினார்.
ரூ.14 லட்சம்
இதைத்தொடர்ந்து அஜித்குமாரை தொடர்பு கொண்ட அந்த நபர் உங்களுக்குத்தான் கார் பரிசு விழுந்துள்ளது எனவும், நீங்கள் கார் அல்லது அதற்கு உண்டான தொகையான ரூ.14 லட்சத்து 80 ஆயிரத்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார். அஜித் குமாரும் இதை உண்மை என்று நம்பியுள்ளார்.
பின்னர் அந்த நபர் அஜித்குமாரிடம் காருக்கான பதிவு கட்டணம், வரி, புதிய கணக்கு தொடங்குவதற்கான கட்டணம், சரக்கு மற்றும் சேவை வரி, கமிஷன் என பல்வேறு காரணங்களை சொல்லி கொஞ்சம் கொஞ்சமாக பல தவணைகளில் ரூ.14 லட்சத்தை பெற்றுள்ளார்.
விசாரணை
அதன்பின்னர் அந்த நபர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அஜித்குமார் இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் மோசடி கும்பலின் வங்கி கணக்குகளை முடக்கும் நடவடிக்கையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சைபர் கிரைம் போலீசார் பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும் அவ்வப்போது இதுபோன்ற மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.