அதிக விலைக்கு மது விற்ற ஊழியர்களுக்கு ரூ.1.41 லட்சம் அபராதம்
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் அதிக விலைக்கு மது விற்ற ஊழியர்களுக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் அதிக விலைக்கு மது விற்ற ஊழியர்களுக்கு ரூ.1.41 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதாக கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.
அபராதம்
குமரி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்த கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியபோது கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைபடி கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மது விற்பனை தொடர்பாக வாரந்தோறும் சம்பந்தப்படட அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து மதுக்கடைகளிலும் கண்டிப்பாக விலைப்பட்டியல் வாடிக்கையாளர்களுக்கு நன்கு தெரியும்படி வைக்க வேண்டும். மேலும் அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட அதிக விலையில் விற்பனை செய்யக் கூடாது. இதனை ஆய்வு செய்வதற்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஆய்வு செய்ததில் தவறு செய்த மதுக்கடை விற்பனையாளர்களிடம் இருந்து கடந்த வாரம் வரை ரூ.1 லட்சத்து 41 ஆயிரத்து 600 அபராத தொகை வசூலிக்கப்பட்டது.
பணிநீக்கம்
தற்போது அரசு நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை விட கூடுதல் விலை கேட்டு வாடிக்கையாளரிடம் திட்டி தகராறு செய்த பணியாளர் குறித்து வாட்ஸ்அப் மூலம் சமூக வலைதளத்தில் வெளியாகி வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் ஈடுபடும் மதுபான கடை ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதுடன் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் மதுபானம் குறித்து புகார்களை 1800 425 2015 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் வருவாய் அலுவலர் சிவப்பிரியா, பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், துணை இயக்குனர் (டாஸ்மாக்) சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.