60 பயனாளிகளுக்கு ரூ.16 கோடி கடனுதவி


60 பயனாளிகளுக்கு ரூ.16 கோடி கடனுதவி
x

நீலகிரி மாவட்டத்தில் 60 பயனாளிகளுக்கு ரூ.16 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

நீலகிரி

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் 60 பயனாளிகளுக்கு ரூ.16 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகளை கலெக்டர் அம்ரித் வழங்கினார்.

கடன் உதவி

75-வது சுதந்திர அமுத பெருவிழாவை முன்னிட்டு, மாவட்ட முன்னோடி வங்கி, நீலகிரி மாவட்ட அளவிலான அனைத்து வங்கிகள் சார்பில் வாடிக்கையாளர்களுடன் 'தொடங்கும் நல்லுறவு, தொடரும் நல்லுறவு" என்ற நிகழ்ச்சி ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் சுயஉதவிக்குழு, தனிநபர் கடன், தாட்கோ கடன், வீட்டுக்கடன், வாகன கடன், விவசாய கடன், தொழில் கடன் உள்ளிட்ட கடனுதவிகள் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட கலெக்டர் அம்ரித் கலந்து கொண்டு, 60 பயனாளிகள் மற்றும் குழுக்களுக்கு ரூ.16 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிக்கான ஒப்புதல் கடிதத்தை வழங்கினார். இதன்மூலம் இதுவரை மொத்தமாக 4,716 பயனாளிகளுக்கு ரூ.55.09 கோடி மதிப்பில் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு உள்ளது.

நம்பிக்கை

இதையடுத்து கலெக்டர் கூறுகையில், நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகள் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் அரசின் கடன் உதவித் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் பாலமாக உள்ளது. வாடிக்கையாளர் கடனுதவி கேட்டு வங்கிகளுக்கு வரும் போது வங்கியாளர்கள் அவர்கள் கடன் உதவி பெறுவதற்கான வழிமுறைகளை சரியான முறையில் தெரிவித்து கடனுதவிகள் வழங்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் மக்களுக்கு வங்கிகள் மீதும் நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கை ஏற்படும். என்றார்.

முன்னதாக பொதுமக்களுக்கு, மாவட்ட தொழில் மையம் சார்பாக மத்திய, மாநில அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

விழிப்புணர்வு

இதைத்தொடர்ந்து தாட்கோ மூலம் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு வழங்கப்படும் தொழில் கடன், சுயஉதவிக்குழு கடன்கள் உதவிகள் குறித்தும், மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் விவசாய கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் பெறுவது குறித்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் கனரா வங்கி மண்டல துணை பொது மேலாளர் சதிஷ்குமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகசிவா, மாவட்ட தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியராஜா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் முத்து சிதம்பரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story