வெள்ளிக்கொலுசு வாங்கி ரூ.20 லட்சம் மோசடி: நகைக்கடை உரிமையாளர் மனைவியுடன் கைது


வெள்ளிக்கொலுசு வாங்கி ரூ.20 லட்சம் மோசடி: நகைக்கடை உரிமையாளர் மனைவியுடன் கைது
x

நெல்லையில் வெள்ளிக்கொலுசு வாங்கி ரூ.20 லட்சம் மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

நெல்லை டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் தங்கவேல் மகன் பார்த்தீபன் (வயது 53). இவர் நெல்லை ஸ்ரீபுரத்தில் தங்க நகைக்கடை வைத்து இருந்தார்.

ரூ.20 லட்சம் மோசடி

கடந்த 2012-ம் ஆண்டில் மதுரையை சேர்ந்த ஒரு நகைக்கடையில் இருந்து வெள்ளி கொலுசுகள் வாங்கி விற்பனை செய்து வந்தார். அதற்கான பணத்தை அந்த நகைக்கடை உரிமையாளருக்கு கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் சுமார் ரூ.20 லட்சத்துக்கு வெள்ளிக்கொலுசுகள் வாங்கி அதற்கான பணத்தை கொடுக்காமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மதுரையை சேர்ந்த அந்த நகைக்கடை உரிமையாளர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதன்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தம்பதி கைது

இந்த நிலையில் பார்த்திபன் மற்றும் அவருடைய மனைவி சண்முகசுந்தரி (44) ஆகியோர் நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வருவதை அறிந்த போலீசார் அங்கு சென்று அவர்களை கைது செய்தனர். இதற்கிடையே பார்த்திபன் மீது தங்க நகை சீட்டு நடத்தி சுமார் ரூ.5 கோடி வரை ஏமாற்றியது உள்ளிட்ட 4 வழக்குகள் இருப்பதும், அந்த வழக்குகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மாநகர குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.


Next Story