தனியார் நிதி நிறுவனம் ரூ.200 கோடி மோசடி; கலெக்டரிடம் புகார்
தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி தனியார் நிதி நிறுவனம் ரூ.200 கோடிக்கு மேல் மோசடி செய்து உள்ளதாக கலெக்டர் முருகேசிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.
தீபாவளி, பொங்கல் சீட்டு நடத்தி தனியார் நிதி நிறுவனம் ரூ.200 கோடிக்கு மேல் மோசடி செய்து உள்ளதாக கலெக்டர் முருகேசிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.
தனியார் நிதி நிறுவனம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நிதி நிறுவன ஏஜெண்டுகள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, கொடுங்கலூர், ஆரணி ஆகிய ஊர்களில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் தீபாவளி, பொங்கல் சீட்டுகளில் ஏஜெண்டுகள் மூலமாக ஏராளமான பொதுமக்கள் பணம் செலுத்தினர். கடந்த ஆண்டு வரை சரியாக பொருட்களை தந்த நிர்வாகம் இந்த ஆண்டு தீபாவளிக்கு பொருட்களை தரவில்லை. இதனால் மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுங்கள் என்று கூறினார். இதற்கிடையில் நிர்வாகத்தில் இருந்து வேலைக்கு ஆட்கள் குறைவாக உள்ள காரணத்தினால் பொருட்களை தருவதற்கு காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. தீபாவளி கழித்து பொருட்கள் தரப்படும் என்று நிதி நிறுவனம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
ஏஜெண்டுகளுக்கு 2 மாதம் கழித்தும் நிர்வாகத்தில் இருந்து சரியான பதில் ஏதும் வரவில்லை. மேலும் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பணம் செலுத்திய ஏஜெண்டுகள் ஒன்று திரண்டு சாலை மறியல் செய்த காரணத்தினால் தனியார் நிதி நிறுவன உரிமையாளர் பணத்திற்காக 'பாண்டு' எழுதி தருகிறேன். ஒரு மாதத்தில் பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று கூறி சிலருக்கு 'பாண்டு' எழுதி கொடுத்தார்.
இந்த நிலையில் உறவினர் திருமணத்திற்கு செல்வதால் 5 நாட்கள் விடுமுறை என்று செய்யாறில் உள்ள அலுவலகம், வந்தவாசியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டை மூடிவிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுடன் கொடைக்கானல் சென்ற உரிமையாளர் இதுவரை திரும்பிவரவில்லை.
ரூ.200 கோடிக்கு மேல்...
தொலைபேசி அழைப்புகளையும் ஏற்கவில்லை. எனவே, உரிமையாளர் தலைமறைவாகிவிட்டார். மோசடி செய்த பணத்தின் மூலமாக வந்தவாசி, செய்யாறு, உத்திரமேரூர், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் 'பினாமி' பெயர்களின் மூலமாக ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்.
மேலும் சொத்துக்கள் சிலவற்றை செய்யாறில் நடந்து வரும் மற்றொரு தனியார் நிதி நிறுவன உரிமையாளர் வாங்கி விட்டதாக தெரிய வருகிறது.
எங்களிடம் பணம் கொடுத்தவர்கள் இரவும், பகலும் எங்கள் வீட்டிற்கு வந்து பணம் கேட்டு எங்களை மிகவும் துன்புறுத்துகின்றனர். எனவே தலைமறைவாக உள்ள நிதி நிறுவன உரிமையாளரை பிடித்து அவரிடம் உள்ள பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் கலெக்டர் அலுவலகத்திற்கு இதுகுறித்து மனு அளிக்க திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த ஏஜெண்டுகளும் வந்திருந்தனர். இந்த சீட்டு பணத்தின் மூலம் தனியார் நிதி நிறுவனம் சுமார் ரூ.200 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டர் முருகேஷிடம் நேரில் சென்று புகார் மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், போலி நிதி நிறுவனங்கள் குறித்து அரசு தரப்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலமும் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு இப்படி பணத்தை இழக்கலாமா என்று கலெக்டர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து மாவட்ட காவல் துறையின் மூலம் உரிய விசாரணை நடத்தப்படும் என்று கலெக்டர் கூறினார். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.