விவசாயிகளுக்கு ரூ.2.05 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்- நெல்லை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
தரமற்ற நெல் விதை விற்பனை செய்ததற்காக விவசாயிகளுக்கு ரூ.2.05 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என நெல்லை நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டது
நெல்லை மாவட்டம் கீழகுன்னத்தூரை சேர்ந்தவர்கள் முருகன், ஆறுமுகவேல் மற்றும் ரவி.
விவசாயிகளான இவர்கள் ஒரு தனியார் நிறுவனத்திடம் நெல் விதை வாங்கினர். அந்த நெல் விதை தரமற்றதாக இருந்ததால் நெட்டையும், குட்டையுமாக பயிர்கள் வளர்ந்துள்ளது. மேலும் நெல் விளைச்சல் குறைந்து, நஷ்டம் ஏற்பட்டது.
இதுகுறித்து 3 பேரும் தரமற்ற நெல் விதையை விற்பனை செய்த கடை மீதும், விற்பனை நிறுவனத்தின் மீதும் வக்கீல் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிபதி கிளாட்சன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனக சபாபதி ஆகியோர் விசாரித்து, தரமற்ற நெல் விதை விற்பனை செய்த நிறுவனமும், விற்பனை செய்த கடையும் சேர்ந்து விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கும், மனஉளைச்சலுக்கும் சேர்த்து ரூ.1.90 லட்சம் வழங்க வேண்டும். மேலும் ஒவ்வொருவர் வழக்கிற்கும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் 3 பேருக்கும் ரூ.15 ஆயிரம் வழக்கு செலவுக்கு வழங்க வேண்டும், என உத்தரவு பிறப்பித்தனர்.