டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் உருவாக்க ரூ.269 கோடியில் ஒப்பந்தம் -மெட்ரோ ரெயில்வே தகவல்
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் கூடுதலாக ரூ.269 கோடி மதிப்பில் 3 பெட்டிகள் கொண்ட 10 மெட்ரோ ரெயில் (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்க உள்ளது.
சென்னை,
மெட்ரோ ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2-ம் கட்டத்தின் கீழ் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 17-ந் தேதி டிரைவர் இல்லாத 3 பெட்டிகள் கொண்ட 26 மெட்ரோ ரெயில்கள் (மொத்தம் 78 பெட்டிகள்) உருவாக்கம் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் நிறுவனத்திற்கு ரூ.946 கோடியே 92 லட்சத்தில் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் துணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் கூடுதலாக ரூ.269 கோடி மதிப்பில் 3 பெட்டி கள் கொண்ட 10 மெட்ரோ ரெயில் (மொத்தம் 30 பெட்டிகள்) வழங்க உள்ளது. எனவே, மொத்தமாக 108 பெட்டிகள் கொண்ட 36 மெட்ரோ ரெயில்கள் அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் நிறுவனம் சென்னை மெட்ரோ ரெயில்வேயிடம் ஒப்பந்தம் அடிப்படையில் வழங்க இருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தில் வடிவமைப்பு, உற்பத்தி, சோதனை, தரமான மெட்ரோ ரெயில் இயக்குதலுக்கான தகுதி, பணியாளர்கள் பயிற்சி, உதிரி பாகங்கள் வழங்குதல் மற்றும் குறைபாடுகளுக்கு பொறுப்பு ஏற்பு உள்ளிட்ட டிரைவர் இல்லாத மெட்ரோ ரெயில் வழங்க வேண்டும் என கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரெயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.