வெளிநாட்டில் நர்சு வேலை வாங்கி தருவதாக ரூ.27¾ லட்சம் மோசடி
சாத்தான்குளம் வாலிபரிடம் வெளிநாட்டில் நர்சு வேலை வாங்கி தருவதாக ரூ.27¾ லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.
வெளிநாட்டில் நர்சு வேலை வாங்கி தருவதாக கூறி சாத்தான்குளம் வாலிபரிடம் ரூ.27¾ லட்சம் மோசடி செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நர்சு வேலை
சாத்தான்குளம் தவசியாபுரத்தை சேர்ந்தவர் சுயம்புலிங்கம். இவருடைய மகன் கவுதம் (வயது 28). இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு இ-மெயில் ஐ.டி.யுடன் கூடிய ஒரு தகவல் வந்தது. அதில் வெளிநாட்டில் நர்சு வேலை இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதனை பார்த்த கவுதம் அந்த தகவலில் இருந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.
பணமோசடி
அப்போது அதில் பேசியவர் வெளிநாட்டுக்கு செல்வதற்கான விசா, பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு படிவங்கள் பெறுவதற்கு பணம் அனுப்புமாறு கூறி உள்ளார். இதனை நம்பிய கவுதம் பல்வேறு தவணையாக ரூ.27 லட்சத்து 74 ஆயிரத்து 894 அனுப்பி வைத்தாராம். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவருக்கு வெளிநாட்டில் நர்சு வேலை வாங்கி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் மோசடியாக ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதன்பேரில் தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்கு பதிவு செய்து, கவுதமிடம் மோசடி செய்த மர்மநபரை தேடிவருகின்றார்.