முசிறி என்ஜினீயர் உள்பட 6 பேரிடம் ரூ.29½ லட்சம் மோசடி
முசிறி என்ஜினீயர் உள்பட 6 பேரிடம் ரூ.29½ லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
என்ஜினீயர்
திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள தா.பேட்டை சாலையை சேர்ந்த முனியப்பனின் மனைவி செல்வி (வயது 47). இவருடைய மகன் கிஷோர்குமார். பி.இ. முடித்த என்ஜினீயரான இவர், அரசு வேலைக்காக முயற்சி செய்து வருகிறார். இந்தநிலையில் முசிறியை சேர்ந்த கங்காதரன் என்பவர் மூலம் சென்னை மணலியை சேர்ந்த முருகானந்தம் என்ற நந்தகுமார் கடந்த 2016-ம் ஆண்டு இவர்களுக்கு அறிமுகமாகி இருக்கிறார்.
அப்போது அவர், தான் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் தான் வேலை செய்து வருவதாகவும், உங்கள் மகனுக்கும் அரசு வேலை வாங்கி கொடுக்கிறேன் என்றும் செல்வியிடம் முருகானந்தம் கூறியுள்ளார்.
மெட்ரோ நிறுவனத்தில் வேலை
இதையடுத்து செல்வி, தனது மகனுக்கு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், முருகானந்தத்தின் வங்கி கணக்குக்கு கடந்த 2016-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை முன்பணமாக அனுப்பி இருக்கிறார். பின்னர் 2017-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 85 ஆயிரமும், அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் அனுப்பி உள்ளார்.
ஆனால் கிஷோர்குமாருக்கு வேலை கிடைக்கவில்லை. இதுபற்றி முருகானந்தத்திடம் கேட்டபோது, சென்னை ஆவடி காமராஜர் நகரை சேர்ந்த ஏ.எம்.பிரபு, ஒட்டியம்பாக்கத்தை சேர்ந்த தாஸ் கிருபானந்த போஸ், கொடிவளாகம் காவேரிநகரை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் முகமது பகத் ஆகியோரை செல்விக்கு அறிமுகம் செய்து வைத்து, இவர்கள் தான் அரசு வேலை வாங்கி தருவார்கள் என்று கூறியுள்ளார்.
போலீஸ் சூப்பிரண்டு மருமகன்
அப்போது, ஏ.எம்.பிரபு தான் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவின் மருமகன் என்றும், உங்களுக்கு தெரிந்த சிலரை அழைத்து வந்தால் சுலபமாக வேலை வாங்கி கொடுத்து விடலாம் என்றும் கூறியுள்ளார்.
இதன்படி, செல்வி அவருக்கு தெரிந்த சிவமாறன், விக்னேஷ், மோகனபிரசாத், வேல்முருகன், கிஷோர்குமார் ஆகியோரிடம் பணம் பெற்று ஏ.எம்.பிரபு கூறிய வங்கி கணக்கு மூலமாகவும், நேரடியாகவும் பல தவணைகளாக மொத்தம் ரூ.29 லட்சத்து 67 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணம் கொடுத்து வெகுநாட்கள் ஆகியும், அவர் கூறியபடி வேலை வாங்கி கொடுக்கவில்லை.
ரூ.29½ லட்சம் மோசடி
இதனால் ஏ.எம்.பிரபு குறித்து விசாரித்தபோது, அவர் கூறியது அனைத்தும் பொய் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து செல்வி பணத்தை திருப்பி கேட்டபோது, அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாரிடம் புகார் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்டதாக 5 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜி.சீனிவாசன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்