ரூ.3 கோடி கஞ்சா எரிப்பு


ரூ.3 கோடி கஞ்சா எரிப்பு
x

தஞ்சை அருகே ரூ.3 கோடி கஞ்சா எரிக்கப்பட்டது

தஞ்சாவூர்
திருச்சி மாநகர் மற்றும் புறநகர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டல பகுதிகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா மூட்டை, மூட்டையாக கட்டி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. கஞ்சா கடத்தியவர்கள் மீது அந்தந்த போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அழிக்க முடிவு

இந்தநிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ஒரே இடத்தில் வைத்து அழிக்க போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள அயோதிப்பட்டியில் உள்ள மருந்து கழிவுகளை எரிக்கும் தனியார் தொழிற்சாலையில் உள்ள ராட்சத கொதிகலனில் கஞ்சாவை கொட்டி எரிக்க முடிவு செய்யப்பட்டது.இதைத்தொடர்ந்து மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா அனைத்தும் அந்தந்த மாவட்ட போலீசார் பலத்த பாதுகாப்புடன் அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு நேற்று கொண்டு வந்தனர்.

தீயில் கொட்டி எரிப்பு

இதைத்தொடர்ந்து திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், திருச்சி துணை கமிஷனர் அன்பு, திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எடை போட்டு பார்க்கப்பட்டது. அப்போது மொத்தம் 2,082 கிலோ மற்றும் 304 கிராம் கஞ்சா இருந்தது. பின்னர், கஞ்சா வழக்குகள் சரிபார்க்கப்பட்டன.தொடர்ந்து கஞ்சா மூட்டைகள் ஒவ்வொன்றையும் பிரித்து ராட்சத கொதிகலனில் கொட்டி எரிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.3 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரம் என போலீசார் தெரிவித்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

கஞ்சாவை ஒட்டுமொத்தமாக அழிக்கும் பணியின்போது அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாத வண்ணம் மத்திய மண்டலத்தை சேர்ந்த 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கஞ்சாவை ராட்சத கொதிகலனில் கொட்டி எரிக்கும பணி காலை 11.30 மணிக்கு தொடங்கி பல மணி நேரம் நீடித்தது.






Next Story