இளைஞர்களுக்கு ரூ.3 கோடி கடன் மானியம்


இளைஞர்களுக்கு ரூ.3 கோடி கடன் மானியம்
x

தேனி மாவட்ட தொழில் மையம் மூலம் இளைஞர்களுக்கு ரூ.3 கோடி கடன் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக அரசு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்கவும், தொழில்முனைவோர்களாக உருவாக்கவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாவட்ட தொழில் மையம் மூலம் 25 சதவீத மானியத்துடன் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தேனி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து தற்போது வரை புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 31 இளைஞர்களுக்கு ரூ.12 கோடியே 13 லட்சத்து 45 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதற்கு மானியமாக ரூ.1 கோடியே 59 லட்சத்து 42 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கிழ் 159 இளைஞர்களுக்கு ரூ.5 கோடியே 69 லட்சத்து 6 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அதில் மானியமாக ரூ.1 கோடியே 39 லட்சத்து 68 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களின் கீழ் 190 விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.17 கோடியே 82 லட்சத்து 51 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த கடனுக்கு மானியமாக ரூ.2 கோடியே 99 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த திட்டங்களின் கீழ் கடனுதவி பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story