இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு
இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 49). விவசாயி. இவர் நேற்று ஒரு வங்கியில் நகைகளை அடமானம் வைத்து ரூ. 3 லட்சம் பெற்றுள்ளார். மேலும் 1½ பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை தனது இருசக்கர வாகனத்தின் பின்பக்கத்தில் வைத்து விட்டு புறப்பட்டார். அப்போது வாகனத்தில் ்முன் பக்க டயர் பஞ்சராகி இருந்ததை பார்த்தார். இதனால் வங்கி அருகில் உள்ள ஒர்க் ஷாப்பில் பஞ்சர் பார்க்க சென்றார். அப்போது 2 இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர், தங்களின் இருசக்கர வாகனத்தை வேலை பார்க்க வேண்டும் என்றனர். அதற்கு மெக்கானிக் இப்போது பார்க்க முடியாது என கூறினார். இதையடுத்து சிறிது நேரம் அங்கே நின்றுவிட்டு சென்று விட்டார்கள். அவர்கள் சென்றதும் கிருஷ்ணமூர்த்தி தனது வாகனத்தில் இருந்த பணம் மற்றும் நகையை பார்த்தபோது அதை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்த புகாரின்பேரில், சிங்கம்புணரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.