மோசடி நிதி நிறுவனத்திடம் ரூ.32 லட்சம் லஞ்சம்; போலீஸ் துணை சூப்பிரண்டு பணி இடைநீக்கம்
மோசடி நிதிநிறுவனத்திடம் ரூ.32 லட்சம் லஞ்சம் வாங்கிய புகாரில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு கபிலன் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் சில அதிகாரிகளிடம் விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
சென்னை,
சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் சிக்கிய 4 பெரிய மோசடி நிதி நிறுவனங்கள் பற்றி தினமும் திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது அனைவருக்கும் தெரியும். ஆருத்ரா, ஹிஜாவு, ஐ.எப்.எஸ்- எல்.என்.எஸ். என்ற 4 நிதி நிறுவனங்கள்தான் அவை.
அதிக வட்டி ஆசைகாட்டி பொதுமக்களிடம் முதலீட்டு தொகை வசூலித்து, சுமார் 2 லட்சத்து, 84 ஆயிரம் பேர்களிடம், ரூ.13 ஆயிரத்து 700 கோடியை இந்த நிறுவனங்கள் ஏப்பம் விட்டன.
இவ்வளவு பெரிய மோசடியை விசாரிக்கும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் மோசடி நிதி நிறுவனங்களிடம் லஞ்ச தொகையை பெற்றுக்கொண்டு, அவற்றோடு கைகோர்த்து செயல்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதனால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் உயர் அதிகாரிகள் சிலர் அதிரடியாக மாற்றப்பட்டு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரடியாக தலையிட்டு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசுக்கு புது பொலிவூட்டினார். அதன்பிறகு அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்தது. நிதி நிறுவன மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவு குற்றவாளிகள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டது. வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஊழல் அதிகாரிகள் பற்றி விசாரணை
இந்த நிலையில் மோசடி நிதி நிறுவன குற்றவாளிகளிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, அவர்களோடு கைகோர்த்து செயல்பட்ட அதிகாரிகள் குறித்தும் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. அதில் 89 ஆயிரம் பேர்களிடம், ரூ.5,900 கோடி சுருட்டிய ஐ.எப்.எஸ். நிதிநிறுவன குற்றவாளிகளிடம் இருந்து லட்சக்கணக்கில் லஞ்சம் கைமாறியதாக தெரிய வந்தது.
ரூ.32 லட்சம் லஞ்சம்-இடைநீக்கம்
ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தின் ஏஜெண்டு அரிகிருஷ்ணன் என்பவரிடம் இருந்து ரூ.32 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கபிலன் என்ற துணை சூப்பிரண்டு சிக்கினார். அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் எதுவும் சிக்கவில்லை.
லஞ்ச பணத்தில் சொகுசு கார் வாங்கி உள்ளார். அந்த கார் மீட்கப்பட்டது. மீதி லஞ்ச பணத்தை எங்கு மறைத்து வைத்துள்ளார், என்று விசாரணை நடக்கிறது. அவரை பணி இடைநீக்கம் செய்து நேற்று முன்தினம் இரவு உத்தரவிடப்பட்டது. அவர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
லஞ்சத்தில் சிக்கிய அதிகாரி கபிலன், கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடியாக துணை போலீஸ் சூப்பிரண்டாக தேர்வாகி பணியில் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கபிலனை லஞ்சத்தில் சிக்க வைத்த ஏஜெண்டு அரிகிருஷ்ணனும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார். அவரது சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளது.
அமலாக்கத்துறை விசாரணை
லஞ்ச அதிகாரி கபிலனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். மேலும் யார், யார் ஊழலில் ஈடுபட்டார்கள் என்றும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வளவு பெரிய கோடிகள் மோசடியாக புரண்டதால், அதுபற்றி விசாரித்த அதிகாரிகளும் கோடிகளிடம் சிக்கி விட்டார்கள்.
தற்போது நேர்மையான அதிகாரிகள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் நியமிக்கப்பட்டு உள்ளார்கள் என்றும், பொதுமக்கள் இழந்த பணத்தை மீட்டுத்தர தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.