ஆன்லைன் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாக வாலிபரிடம் ரூ.32 லட்சம் மோசடி


ஆன்லைன் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாக வாலிபரிடம் ரூ.32 லட்சம் மோசடி
x

ஆன்லைன் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாக வாலிபரிடம் ரூ.32 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

வேலூர்

இரட்டிப்பு பணம்

வேலூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு வீட்டிலிருந்தே வேலை தருவதாக கூறி ஆன்லைனில் விளம்பரம் வந்தது. அதனை வாலிபர் பின் தொடர்ந்தார்.

அப்போது மர்மநபர்கள் அவரது செல்போனுக்கு ஒரு லிங்க் அனுப்பினர். அந்த லிங்கில் சென்று அதிக பொருட்கள் மற்றும் ஓட்டல்களை காட்டி அதற்கு மதிப்பீடு வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கி அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பாக பணம் கிடைக்கும் என தெரிவித்தனர். இதனை நம்பி முதலில் 100 ரூபாய், 150 ரூபாய் என வாலிபர் அந்த லிங்கில் முதலீடு செய்தார். அதில் அவருக்கு இரட்டிப்பாக பணம் கிடைத்தது.

பின்னர் ரூ.10 ஆயிரம் செலுத்தி ரூ.26 ஆயிரம் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மீண்டும் ரூ.10 ஆயிரம் செலுத்தி ரூ.34 ஆயிரம் பெற்று வந்துள்ளார்.

போலீசில் புகார்

இதனால் அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் தொடர்ந்து வாலிபர் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் ஆன்லைனில் முதலீடு செய்து கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்த பணம் தீர்ந்து போனது. இதனால் வீட்டில் இருந்த நகைகளை அடகு வைத்து பணத்தை கொண்டு வந்து ஆன்லைனில் முதலீடு செய்தார். மேலும் வங்கியில் கடன் வாங்கியும் அவர் பணம் கட்டி உள்ளார். ரூ.31 லட்சத்து 99 ஆயிரத்து 845 வரை வாலிபர் பணத்தை கட்டிய பிறகு அதனை எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை. ஆன்லைன் முதலீடுகளை முழுவதுமாக முடித்தால் தான் பணத்தை எடுக்க முடியும் என அதில் தெரிவித்தனர்.

அப்போது தான் வாலிபர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதுகுறித்து வேலூர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அபர்ணா மற்றும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதில் வரும் வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்தி பொதுமக்கள் எந்த காரணத்தை கொண்டும் ஏமாற வேண்டாம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story