தம்பதியிடம் ரூ.35 லட்சம் மோசடி


தம்பதியிடம் ரூ.35 லட்சம் மோசடி
x

நிதி நிறுவனத்தில் பங்குதாரராக சேர்ப்பதாக கூறி, தம்பதியிடம் ரூ.35 மோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகரின் உறவினர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

ரூ.35 லட்சம் மோசடி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அம்பிளிக்கையை சேர்ந்தவர் திருமலைசாமி (வயது 66). விவசாயி. அவருடைய மனைவி லட்சுமி (60). இவர்களை, கடந்த சில நாட்களுக்கு முன்பு கொசவபட்டியை சேர்ந்த காளிமுத்து (55), செந்தில்குமார் (45) ஆகியோர் தொடர்பு கொண்டனர்.

அப்போது 2 பேரும் ஒட்டன்சத்திரத்தில் தனியார் நிதிநிறுவனம் நடத்தி வருவதாக தெரித்தனர். அதோடு தங்களுடைய நிதிநிறுவனத்தில் பங்குதாரராக லட்சுமியை சேர்ப்பதாகவும், அதன்மூலம் நிறைய வருமானம் கிடைக்கும் என்றும் அவர்கள் கூறியதாக தெரிகிறது.

இதனை உண்மை என நம்பிய திருமலைசாமி, லட்சுமி தம்பதியினர் ரூ.35 லட்சம் கொடுத்து உள்ளனர். ஆனால் நிதி நிறுவனத்தின் லாபத்தில் திருமலைசாமி, லட்சுமி தம்பதிக்கு பங்கு கொடுக்காமல் காலம் கடத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஏமாற்றம் அடைந்த தம்பதி, தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டனர். அப்போது காளிமுத்து மற்றும் செந்தில்குமார் ஆகியோர் மிரட்டியதாக கூறப்படுகிறது. அதன்பிறகே, தங்களிடம் அவர்கள் பணம் மோசடி செய்ததை தம்பதி உணர்ந்தனர்.

2 பேர் கைது

இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் லட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிமுத்து, செந்தில்குமார் ஆகியோரை கைது செய்தனர். இதில் செந்தில்குமார் என்பவர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் நடராஜின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story