ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு ரூ.3.97 லட்சம் காப்பீட்டு தொகை - நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கை


ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு ரூ.3.97 லட்சம் காப்பீட்டு தொகை - நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கை
x

நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கை மூலம் ஓய்வுபெற்ற அரசு ஊழியருக்கு ரூ.3.97 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் பத்தமடை சிவானந்தா தெருவை சேர்ந்தவர் சிவகுரு சுப்பிரமணியன் (வயது 65), ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் கடந்த மே மாதம் 16-ந்தேதி நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், நான் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.53,054 செலுத்தினேன். அந்த பணம் முதிர்வு பெற்ற பிறகு, தவணை முடித்து விட்டதாக மட்டும் தகவல் அளித்தனர். ஆனால் முதிர்வு தொகை தரவில்லை. எனவே காப்பீட்டு தொகையை பெற்றுதர வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையொட்டி நிரந்தர மக்கள் கோர்ட்டு நீதிபதி சபீனா காப்பீட்டு நிறுவன கிளை மேலாளருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தினார். அப்போது இருதரப்பினருக்கு இடையேயான சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் காப்பீட்டு நிறுவன வக்கீல் ரிச்சர்டு டொடு பென்னி சாலமன், காப்பீட்டு தொகை ரூ.3.97 லட்சத்துக்கான காசோலையை நிரந்தர மக்கள் கோர்ட்டில் கடந்த 26-ந்தேதி ஒப்படைத்தார். அந்த காசோலையை சிவகுரு சுப்பிரமணியன் வங்கி கணக்கில் பணமாக்க வழங்கப்பட்டது. இந்த நிலையில் சிவகுரு சுப்பிரமணியன் நேற்று நிரந்தர மக்கள் கோர்ட்டு நீதிபதி சமீனா முன்னிலையில் ஆஜராகி காசோலை தொகையான ரூ.3.97 லட்சம் தனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.


Next Story