அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
மானூா் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மானூர்;
மானூர் அருகே களக்குடியைச் சேர்ந்தவர் அய்யாகுட்டி (வயது 51). இவருடைய மகன் சிவகுமார். இவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, விருதுநகர் மாவட்டம் குருமூர்த்திநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பொன்னையா மகன் கூடலிங்கம் என்ற கனி, இவருடைய மனைவி கார்த்திகை செல்வி ஆகிய 2 பேரும் சிவகுமாரின் உறவினர்களிடம் பல்வேறு தவணைகளாக ரூ.4 லட்சத்தை பெற்றதாக கூறப்படுகிறது.
பின்னர் சிவகுமாருக்கு போலி பணி நியமன ஆணை, அடையாள அட்டை வழங்கியதாக தெரிகிறது. ஆனால் அவை போலியானவை என்பதை அறிந்த சிவகுமார் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், கூடலிங்கம், கார்த்திகை செல்வி ஆகிய 2 பேர் மீதும் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூடலிங்கம், முன்னாள் ராணுவ வீரர் ஆவார். அவருடைய மனைவி கார்த்திகை செல்வி, கோவை மாவட்டத்தில் பெண் போலீசாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.