சைபர் கிரைம் மோசடியில் இழந்த ரூ.4½ லட்சம் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைப்பு
சைபர் கிராம் மோசடியில் பணத்ைத இழந்தவர்களுக்குரூ.4½ லட்சம் பணம் மீட்டு வழங்கப்பட்டது.
ஊட்டி
சைபர் கிராம் மோசடியில் பணத்ைத இழந்தவர்களுக்குரூ.4½ லட்சம் பணம் மீட்டு வழங்கப்பட்டது.
சைபர் கிரைம் வழக்குகள்
கணினி அல்லது இணைய சேவை மூலம் நடைபெறும் குற்றங்கள் அனைத்தும் சைபர் குற்றங்களாகும்.குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் இது இரு மடங்கு அதிகமாகி விட்டது. சைபர் கிரைமை பொறுத்தவரை 60 சதவீத குற்றங்கள் பேராசையாலும், 40 சதவீத குற்றங்கள் அறியாமையாலும் நடக்கிறது. பொதுவாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பார்முலாவை பின்பற்றி மோசடி பேர்வழிகள் பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள். இதனால் படித்தவர்கள் கூட சைபர் கிரைம் குற்றங்களில் சிக்கி பணத்தை இழந்து விடுகின்றனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் துணை சூப்பரண்டு சவுந்தர்ராஜன் மற்றும் இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார், நீலகிரி மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றங்களில் சிக்கி, மோசடி ஆசாமிகளுக்கு அனுப்பப்பட்ட பணத்தை வங்கி மூலம் மீட்டு மீண்டும், புகார்தாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ரூ.4½ லட்சம்
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:- சைபர் கிரைம் புகார் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை, வங்கி மூலம் மீட்டு புகார்தாரர்களிடம் ஒப்படைத்து வருகிறோம். முதல் கட்டமாக 7 பயனாளிகளுக்கு ரூ.4½ லட்சம் கொடுக்கப்பட்டு உள்ளது.
சைபர் கிரைம் குற்றங்களை பொறுத்தவரை 70 சதவீதம் பேர் துணிந்து வந்து தைரியமாக புகார் அளிப்பதில்லை. எனவே சைபர் கிரைம் குற்றங்களில் பாதிக்கப்படுபவர்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
267 வழக்குகள்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு 288 சைபர் கிரைம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.1 கோடியே 18 லட்சத்து 87 ஆயிரத்து 907 ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்து வங்கிகளில் இருந்து ரூ.8 லட்சத்து 11 ஆயிரத்து 768 முடக்கப்பட்டது. மேலும் இதில் ரூ.5 லட்சத்து 15 ஆயிரத்து 870 புகார்தாரர்களுக்கு திரும்ப கொடுக்கப்பட்டது.இதேபோல் கடந்தாண்டு 399 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.4 கோடியே 75 லட்சத்து 35 ஆயிரத்து 563 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதில் ரூ.4 கோடியே 18 லட்சத்து 4 ஆயிரத்து 365 வங்கியில் முடக்கப்பட்டு, ரூ.5 லட்சத்து 89 ஆயிரத்து 660 புகார்தாரர்களுக்கு திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.இதேபோல் நடப்பு ஆண்டில் இதுவரை 267 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2 கோடியே 42 லட்சத்து 62 ஆயிரத்து 498 இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வங்கியில் ரூ.1 கோடியே 49 லட்சத்து 57 ஆயிரத்து 488 முடக்கப்பட்டுள்ளது.