ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு
ஐகோர்ட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.4 லட்சம் மோசடி; தம்பதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மதுரை அனுப்பானடி அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜேம்ஸ் மனைவி தாமரைச்செல்வி. இவர் தெப்பக்குளம் போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, கடந்த 2021-ம் ஆண்டு தெப்பக்குளத்தை சேர்ந்த வெற்றிச்செல்வம், அவரது மனைவி கவுரி ஆகியோர் அறிமுகமானார்கள். அப்போது ஐகோர்ட்டில் அதிகாரிகள் பலரை எங்களுக்கு தெரியும். நீங்கள் பணம் கொடுத்தால் ஐகோர்ட்டில் உறுதியாக வேலை வாங்கி விடலாம் என ஆசைவார்த்தை கூறினர். இதை நம்பி நான் மற்றும் தெரிந்த உறவினர் ஆகியோர் ரூ.4 லட்சம் வரை கொடுத்தோம். பணத்தை பெற்றுக்கொண்ட தம்பதியினர் பணி நியமன ஆணையை எங்களிடம் கொடுத்தனர். அதை கோர்ட்டு அலுவலகத்தில் சென்று காண்பித்தோம். அதை பார்த்த அதிகாரிகள் அது போலி பணி ஆணை என்று தெரிவித்தனர். அதை தொடர்ந்து அவர்களிடம் ரூ.4 லட்சத்தை திருப்பித்தருமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை தர மறுக்கின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கணவன், மனைவி மீது தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.