காரைக்குடி மின்வாரிய அதிகாரியின் மனைவியிடம் ரூ.41 லட்சம் மோசடி


காரைக்குடி மின்வாரிய அதிகாரியின் மனைவியிடம் ரூ.41 லட்சம் மோசடி
x

காரைக்குடி மின்வாரிய அதிகாரியின் மனைவியிடம் ரூ.41 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

மின்வாரிய அதிகாரி

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பாபுரம் லட்சுமி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் புதுவயல் துணை மின் நிலையத்தில் இள மின் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி தேவசேனா (வயது 52). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவருடைய மூத்த மகன் முகேஷ் ஜெர்மனி நாட்டில் எம்.எஸ். படித்து வருகிறார். இளைய மகன் ஸ்ரீராம் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ. படித்து வருகிறார்.

தேவசேனா திருச்சி வரும்போது திருச்சி சத்திரம் பஸ் நிலைய பகுதியில் உள்ள வி.என்.நகரை சேர்ந்த ரெஜினா பேகம் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். அப்போது, தில்லைநகர் 6-வது மேற்கு குறுக்கு தெருவில் உள்ள 'ரைட் கேப்பிட்டல் ரியல் எஸ்டேட்' நிறுவனத்தின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுகன்யா, அந்த நிறுவனத்தின் இயக்குனரான தூத்துக்குடியை சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோரை தேவசேனாவுக்கு ரெஜினாபேகம் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

ரூ.41 லட்சம் முதலீடு

கிருஷ்ணமூர்த்தியின் தந்தை நாராயணசாமி, மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதனால் ரவிச்சந்திரனுக்கு அவரை நன்கு தெரியும். கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் ரவிச்சந்திரனின் வீட்டுக்கு நாராயணசாமி தனது மகன்-மருமகளுடன் சென்றுள்ளார். அப்போது அவர்கள், ரவிச்சந்திரன்-தேவசேனா தம்பதியிடம் தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறியுள்ளனர்.

அதில் முதலீடு செய்ய ரூ.50 லட்சம் தேவைப்படுவதாகவும், நீங்கள் முதலீடு செய்தால் 3 மாதத்தில் பணத்தை இரு மடங்காக திருப்பி தந்துவிடுவதாகவும் கூறியுள்ளனர். இதை நம்பிய தேவசேனா ரூ.41 லட்சத்தை அக்கம், பக்கத்தில் கடன் வாங்கி, திருச்சி தில்லைநகரில் உள்ள ரைட் கேப்பிட்டல் அலுவலகத்தில் வைத்து கிருஷ்ணமூர்த்தி-சுகன்யா தம்பதியிடம் கொடுத்துள்ளார்.

அலைக்கழிப்பு

இதைத்தொடர்ந்து அந்த நிறுவன மேலாளர் சதீஷ்குமார், ரூ.41 லட்சத்தை சிறு, சிறு தொகையாக பிரித்து தேவசேனா, அவருடைய தந்தை சேதுராமன், மகன் முகேஷ், நாத்தனார் திலகவதி உள்ளிட்டவர்கள் பெயர்களில் ரசீது கொடுத்துள்ளார். ஆனால் அதில் இடம் வாங்குவதற்கு பதில் பணம் கொடுத்ததாக மட்டும் குறிப்பிட்டு இருந்துள்ளது. இதுபற்றி கேட்டதற்கு அவர்கள் நீங்கள் செலுத்திய தொகையை இருமடங்காக பணமாகவே திருப்பி கொடுத்துவிடுவோம் என்று கூறியுள்ளனர்.

பின்னர் 3 மாதங்கள் கழித்து ரவிச்சந்திரன்-தேவசேனா தம்பதி அந்த நிறுவனத்துக்கு சென்று பணத்தை கேட்டபோது, கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. ஊரடங்கு முடிந்தவுடன் உங்கள் பணத்தை கூறியபடி இருமடங்காக திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று அவர்கள் கூறியுள்ளனர். அதன்பிறகு பலமுறை கேட்டபோதும், பல்வேறு காரணங்களை கூறி பணத்தை கொடுக்காமல் ரவிச்சந்திரன்-தேவசேனா தம்பதியை அவர்கள் அலைக்கழித்துள்ளனர்.

மோசடி-கைது

பிறகுதான் அவர்கள் தங்களிடம் பணத்தை பெற்று ஏமாற்றியதுடன், பலரிடமும் இதுபோல் பணத்தை பெற்று மோசடி செய்தது அவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேவசேனா இதுபற்றி திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில், ரைட் கேப்பிட்டல் ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி சுகன்யா, மேலாளர் சதீஷ்குமார் மற்றும் ரெஜினாபேகம், அந்த நிறுவன இயக்குனர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது மாநகர குற்றப்பிரிவு உதவி போலீஸ் கமிஷனர் முருகவேல், இன்ஸ்பெக்டர் கோசலைராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி ஜே.எம்.-1 கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story