ரூ.5 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் சிக்கின
இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் சிக்கின. இதில் தொடர்புடைய கும்பல் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
பனைக்குளம்,
இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் சிக்கின. இதில் தொடர்புடைய கும்பல் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
650 கிலோ கடல் அட்டைகள்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை பகுதியில் உள்ள வீடு ஒன்றில், அரிய வகை கடல் உயிரினங்களில் ஒன்றான கடல் அட்டைகள் அதிக அளவில் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து மண்டபம் வன பாதுகாப்பு படை, கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் கடலோர காவல் படையினர் இணைந்து அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் அந்த வீட்டில் இருந்து சுமார் 650 கிலோ அளவுக்கு கடல் அட்டைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், அவற்றை பதப்படுத்துவதற்கு வைத்திருந்த ஏராளமான பாத்திரங்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை பிளாஸ்டிக் டப்பாக்களில் நிரப்பி மண்டபத்தில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.
ரூ.5 கோடி மதிப்பு
கடல் அட்டை பதுக்கி வைத்திருந்த அந்த வீடு யாருடையது என்பது குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இலங்கைக்கு கடத்துவதற்காக இந்த கடல் அட்டைகளை வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி இருக்கும் என கூறப் படுகிறது. அந்த வீட்டில் கடல் அட்டைகளை பதுக்கியவர்கள் யார்? இலங்கைக்கு யார் மூலம் கடத்திச்செல்ல இருந்தார்கள்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.