வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி


வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி
x

அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தனியார் நிறுவன ஊழியர்

நாகர்கோவில் மீனாட்சிபுரம் தோப்பு வணிகர் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது30). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் நாகர்கோவிலில் நகை கடை ஒன்றில் வேலை செய்து வரும் மிடாலத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவரின் மனைவி ரதி (35) என்பவர் அறிமுகமானார். அவர், ராமகிருஷ்ணனிடம் எனது கணவர் டிரைவராக உள்ளார். அவருக்கு அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் பழக்கம் உள்ளது. அங்கு ஒரு எழுத்தர் பதவி காலியாக இருப்பதாகவும், அந்த பணியிடத்திற்கு பணம் கொடுத்தால் பணி நியமனம் வாங்கி விடலாம் என்று கூறியதாக தெரிகிறது.

ரூ.5 லட்சம் மோசடி

இதை நம்பிய ராமகிருஷ்ணன் கடந்த ஆண்டு நாகர்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளை ஒன்றின் மூலம் ரூ.5 லட்சத்தை ரதி மற்றும் அவரது கணவர் சுதாகர் ஆகியோரிடம் கொடுத்துள்ளார். பின்னர் பணி நியமன உத்தரவு நகலை சுதாகர் வாட்ஸ்-அப் மூலம் ராமகிருஷ்ணனுக்கு அனுப்பியுள்ளார். ராமகிருஷ்ணன் அதை எடுத்துச் சென்று அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் விசாரித்துள்ளார்.

அப்போது அங்கு எழுத்தர் பணியிடம் காலி இல்லை என்பதும், பணி நியமன உத்தரவு போலி என்பதும் தெரிய வந்தது. தான் ஏமாற்றப்பட்டது அறிந்த ராமகிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தாார். இதுகுறித்து அவர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பணத்தை திரும்ப கொடுக்காமல் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தம்பதி மீது வழக்கு

பின்னர், இதுகுறித்து ராமகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் புகார் மனு தாக்கல் செய்தார். புகார் மனுவை விசாரித்த மாதிஸ்திரேட்டு இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க கோட்டார் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சுதாகர், ரதி ஆகிய 2 பேர் மீது கோட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story