ரூ.50 ஆயிரத்தை மீட்டு பெண்ணிடம் ஒப்படைப்பு


ரூ.50 ஆயிரத்தை மீட்டு பெண்ணிடம் ஒப்படைப்பு
x

ஆன்லைன் மோசடியில் இழந்த ரூ.50 ஆயிரத்தை மீட்டு, பெண்ணிடம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஒப்படைத்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மணலூரை சேர்ந்த ஹரிகிருஷ்ணாவின் மனைவி அருந்ததி. இவர், ஆன்லைனில் பொருட்களை வாங்குவதற்கு ஆர்டர் செய்தார். அப்போது அவருக்கு பொருட்கள் கிடைக்காததால், வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ள விரும்பினார். இதற்கான இணையதளத்தில் தேடியபோது, அந்த ஆன்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் தொலைபேசி எண் என்று ஒரு எண் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு அவர் பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், எனிடெஸ்க் எனும் செயலியை பதிவிறக்கம் செய்யும்படி கூறினார். அதன்படி செயலியை பதிவிறக்கம் செய்து, ஒருமுறை கடவு சொல்லை அவர் தெரிவித்தார். உடனே அருந்ததியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் மாயமானது. அதன்பின்னரே அந்த வாடிக்கையாளர் சேவை எண் போலியானது என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் அவர் புகார் அளித்தார். இதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து அருந்ததியின் பணத்தை மீட்டனர். அந்த தொகையை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேற்று அருந்ததியிடம் வழங்கினார். அப்போது சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி உடன் இருந்தார்.


Next Story