ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.51 லட்சம் மோசடி
ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.51 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
சிவகாசி,
திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 48). இவர் சிவகாசியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் திருத்தங்கல் ஆலாவூரணியை சேர்ந்த சத்தியராஜ், அய்யாசாமி, மேலும் ஒருவர் சிவகாசி-விருதுநகர் ரோட்டில் ஆமத்தூர் அருகில் 1 ஏக்கர் ரூ.81 லட்சம் வீதம் 5 ஏக்கர் நிலத்தை ரூ.4 கோடியே 5 லட்சத்துக்கு வாங்கி தருவதாக கூறி உள்ளனர். இதை உண்மை என நம்பிய ஈஸ்வரன் கடந்த 21.6.2023 அன்று ரூ.10 லட்சம் அட்வான்ஸ் தொகை கொடுத்துள்ளார். பின்னர் 29.6.2023 அன்று நிலப்பத்திர பதிவுக்கு ரூ.41 லட்சம் செலவாகும் என்று கூறி அந்த தொகையை சத்தியராஜூம், அய்யாசாமியும் பெற்றதாக கூறப்படுகிறது. பணத்தை பெற்று சென்றவர்கள் பத்திரபதிவுக்கு தன்னை அழைக்காததால் சந்தேகம் அடைந்த ஈஸ்வரன், சத்தியராஜை செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்ற போது அவரது போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஈஸ்வரன் உறவினர்கள் சிலரை உடன் அழைத்துக்கொண்டு ஆலாவூரணியில் உள்ள சத்தியராஜ் வீட்டிற்கு சென்று நிலப்பத்திரப்பதிவு குறித்து கேட்டுள்ளார். அப்போது சத்தியராஜ், ஈஸ்வரனை யார்? என்று தெரியாது என்று கூறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஈஸ்வரன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் சத்தியராஜ், அய்யாசாமி, மேலும் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.