2,732 மாணவ, மாணவிகளுக்கு ரூ.56¾ கோடி கல்விக்கடன்
வங்கிகளின் காலாண்டுக்குரிய ஆய்வுக்கூட்டத்தில் சேலம் மாவட்டத்தில் 2,732 மாணவ, மாணவிகளுக்கு ரூ.56¾ கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் கார்மேகம் கூறினார்.
ஆய்வு கூட்டம்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வங்கிகளின் 3-ம் காலாண்டிற்குரிய ஆய்வுக் கூட்டம் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பொதுமக்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு அரசு, பெரும்பாலான நடவடிக்கைகளை வங்கிகள் மூலமே மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் 227 பொதுத்துறை வங்கி கிளைகள் உள்ளன. 169 தனியார் வங்கிகள், தமிழ்நாடு கிராம வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளிட்ட 110 அரசு சார்ந்த வங்கிகள் என மொத்தம் 506 வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
வங்கிகள் மூலம் இந்த நிதியாண்டில் வேளாண்மை, கல்விக் கடன், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்னுரிமை திட்டங்களுக்காக ரூ.16 ஆயிரத்து 991 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக, கடந்தாண்டு முடிவடைந்த காலாண்டில் 2,732 மாணவ, மாணவிகளுக்கு ரூ.56 கோடியே 79 லட்சம் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இலக்கு நிர்ணயம்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.950 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, 17 ஆயிரத்து 371 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இலக்கைவிட அதிகமாக ரூ.979 கோடியே 78 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் ரூ.4 கோடியே 88 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை ரூ.6 கோடியே 73 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர்கள் மற்றும் கல்விக் கடன் கேட்டு வரும் மாணவ, மாணவிகளுக்கு வங்கிக் கடன் வழங்க தேவையான நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொள்ள வேண்டும்.மாவட்டத்தில் 2022-23 -ம் நிதியாண்டில் வங்கிகள் மூலம் பல்வேறு முன்னுரிமை திட்டங்களுக்காக ரூ.16 ஆயிரத்து 991 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மகளிர் திட்ட இயக்குனர் பெரியசாமி, முன்னோடி வங்கி மேலாளர் இளவரசு, வேளாண்மை துறை இணை இயக்குனர் சிங்காரம், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவக்குமார், துணை பொது மேலாளர்கள் ராஜ்குமார் (இந்தியன் வங்கி), செல்வராணி (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) உள்ளிட்ட பல்வேறு வங்கி மேலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.