இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.59 கோடி மானியக்கடன்
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.59 கோடி மானியக்கடன் வழங்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு தொழில்துறையின் வளர்ச்சியை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி படித்து வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களை தொழில் தொடங்க வைத்து, இளம் தொழில் முனைவோர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக மாவட்ட தொழில் மையம் மூலம் மானியத்துடன் கூடிய தொழில் கடன் வழங்கப்படுகிறது.
அதன்படி பிளஸ்-2 முதல் பட்டப்படிப்பு வரை தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது. மேலும் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில் தொடங்க 25 சதவீத மானியத்துடன் ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.
ரூ.59 கோடி கடன்
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 7.5.2021 முதல் 54 இளைஞர்களுக்கு ரூ.26 கோடியே 80 லட்சம் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. அதில் ரூ.4 கோடியே 31 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது. மேலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் 207 பேருக்கு ரூ.8 கோடியே 49 லட்சத்து 16 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது. அதில் ரூ.1 கோடியே 89½ லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் 191 பேருக்கு ரூ.18 கோடியே 15 லட்சம் கடனும், அதில் ரூ.5 கோடியே 79 லட்சம் மானியமாகவும் வழங்கப்பட்டது. பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் திட்டத்தில் 130 பேருக்கு ரூ.5 கோடியே 90 லட்சத்து 18 ஆயிரம் கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மாவட்ட தொழில் மையம் சார்பில் 582 பேருக்கு ரூ.59 கோடியே 34 லட்சம் கடனும், ரூ.12 கோடி மானியமும் வழங்கப்பட்டு உள்ளது.