ஆபரண நகை விற்பனை செய்வதாக சேலம் பெண்ணிடம் ரூ.7,100 மோசடி சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்
ஆபரண நகை விற்பனை செய்வதாக கூறி சேலம் பெண்ணிடம் ரூ.7,100 மோசடி செய்யப்பட்டது. அந்த தொகையை சைபர் கிரைம் போலீசார் மீட்டனர்
சேலம்
சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் ஷாலினி. இவர், இன்ஸ்ட்கிராமில் வந்த விளம்பரத்தை பார்த்து ஆபரண நகையை வாங்க அதில் குறிப்பிட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு ரூ.7,100-ஐ அனுப்பி வைத்தார். ஆனால் பல நாட்கள் ஆகியும் அவர் ஆர்டர் செய்த ஆபரணங்கள் எதுவும் வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த ஷாலினி, தனது பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்குமாறு சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் வங்கி கணக்கிற்கு பணம் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வங்கியின் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுத்ததின்பேரில் ஷாலினியிடம் இருந்து பெறப்பட்ட ரூ.7,100-ஐ மீட்டு அவரது வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது. அதேசமயம், மோசடி நபரின் வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்ணை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.