சேலம் டாக்டரிடம் ரூ.78½ லட்சம் மோசடி


சேலம் டாக்டரிடம் ரூ.78½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 7 Nov 2022 1:00 AM IST (Updated: 7 Nov 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி சேலம் டாக்டரிடம் ரூ.78½ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி சேலம் டாக்டரிடம் ரூ.78½ லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

டாக்டர்

சேலம் மாவட்டம் மல்லூரை சேர்ந்தவர் டாக்டர் கிருபாகரன் (வயது 40). இவர் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் வர்த்தகம் செய்தால் அதிகம் லாபம் கிடைக்கும் என்று இருந்தது.

இதை நம்பி குறுஞ்செய்தியில் வந்த இணையதள முகவரியில் பல்வேறு தவணைகளில் ரூ.80½ லட்சம் முதலீடு செய்தேன். அதில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் திரும்ப பெற்றேன். அதன்பிறகு முதலீடு செய்த ரூ.78 லட்சத்து 60 ஆயிரத்தை திரும்ப பெற முடியவில்லை. இதனால் பணம் ஏமாற்றப்பட்டது தெரிந்தது. எனவே மோசடி செய்யப்பட்ட ரூ.78 லட்சத்து 60 ஆயிரத்தை பெற்றுத்தரும்படி கூறியிருந்தார்.

கைது

இது குறித்து விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் படி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ், சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கேரளாவை சேர்ந்த சைதலவிகூட்டலுங்கல் (50) ரூ.38 லட்சம் மோசடி செய்து இருப்பது தெரிந்தது. அதே போன்று டெல்லியை சேர்ந்த சவுரவ் தாகூர் (24) என்ற வாலிபர் ரூ.5 லட்சம் மோசடி செய்து இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து சைதலவிகூட்டலுங்கல், சவுரவ் தாகூர் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்ட சைதலவிகூட்டலுங்கல் மீது ஆந்திரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் வழக்கு நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து மோசடியில் சம்பந்தப்பட்ட மேலும் சிலர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story