திருச்சி பெண்ணிடம் ரூ.9½ லட்சம் மோசடி
சொகுசு கார் பரிசு விழுந்ததாக கூறி திருச்சி பெண்ணிடம் ரூ.9½ லட்சம் மோசடி மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொகுசு கார் பரிசு விழுந்ததாக கூறி திருச்சி பெண்ணிடம் ரூ.9½ லட்சம் மோசடி மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரூ.9 லட்சம் மோசடி
திருச்சி தென்னூர் மசூதி தெருவை சேர்ந்தவர் அகமது ஷெரீப். இவரது மகள் அனிஷா அமல். இவரது செல்போனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்தது. அதில் நான் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்் உங்களில் யார் அடுத்த கோடீஸ்வரர் என்ற நிகழ்ச்சியில் இருந்து பேசுகிறேன்.
உங்கள் செல்போன் நம்பருக்கு ரூ.35 லட்சம் மற்றும் பி.எம்.டபிள்யூ சொகுசு கார் பரிசாக விழுந்துள்ளது. அதனை நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற வேண்டும். அதற்கு ரூ.9 லட்சத்து 39 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை உண்மை என நம்பிய அனிஷா அமல் அந்த மர்ம நபர் கொடுத்த வங்கி கணக்குக்கு ரூ.9 லட்சத்து 39 ஆயிரத்து 500 செலுத்தியுள்ளார்.
வழக்குப்பதிவு
ஆனால் பல மாதங்கள் ஆன பின்னரும் பரிசுத்தொகை அவரது வங்கி கணக்குக்கு வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அனிஷா அமல் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிந்துநதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் திருச்சி நவலூர் குட்டப்பட்டு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (40). இவரது செல்போனுக்கு இணையதளம் மூலம் வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பதற்கான லிங்க் ஒன்று வந்தது. அதனை கிளிக் செய்து உள்ளார். பின்னர் இது தொடர்பாக மர்ம நபர் ஒருவர் பேசியுள்ளார். அதில் நீங்கள் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கினால் அதன் மூலம் கமிஷன் தொகை கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
கமிஷன் தொகை
இதனை நம்பிய ஆரோக்கியராஜ். ஒரு இணையதள முகவரியில் ரூ.5 லட்சத்து 49 ஆயிரத்து 846-க்கு பொருட்கள் வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு எந்த கமிஷன் தொகையும் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.