நூதன முறையில் வாலிபரிடம் ரூ.98 ஆயிரம் அபேஸ்
சிறப்பு பரிசு விழுந்ததாக கூறி நூதன முறையில் வாலிபரிடம் ரூ.98 ஆயிரம் அபேஸ்
வேலூர்
காட்பாடி தாராபடவேடு நேருநகரை சேர்ந்தவர் பரத் (வயது 22). இவரின் செல்போன் எண்ணுக்கு 9-ந் தேதி ஒரு அழைப்பு வந்தது.
மறுமுனையில் பேசிய மர்மநபர் தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், உங்கள் செல்போன் எண்ணுக்கு சிறப்பு பரிசு விழுந்துள்ளது.
நீங்கள் எல்.இ.டி. டி.வி., பிரிட்ஜ், லேப்டாப் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். அதனை ஓரிருநாட்களில் வீட்டின் முகவரிக்கு அனுப்பி வைக்கிறோம் என்று கூறி உள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய பரத் உடனடியாக லேப்டாப் ஒன்றை தேர்வு செய்துள்ளார்.
சிறிதுநேரத்தில் மீண்டும் பேசிய மர்மநபர் டெலிவரிசார்ஜ் உள்ளிட்டவற்றுக்காக முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணுக்கு பணம் அனுப்பி வைக்கும்படி தெரிவித்தார்.
அதையடுத்து பரத் அந்த எண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அனுப்பி உள்ளார். ஆனால் பணம் வரவில்லை என்று மர்மநபர் கூறவே, பரத் மீண்டும், மீண்டும் அந்த எண்ணுக்கு தொடர்ந்து பணம் அனுப்பினார்.
இறுதியாக அவரின் வங்கிக்கணக்கில் இருந்த ரூ.98,620-ம் அனுப்பியது தெரிய வந்தது.
அதையடுத்து பரத் அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முயன்றபோது செல்போன் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.
அப்போது தான் மர்மநபர் ஏமாற்றியது அவருக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து பரத் வேலூர் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அபர்ணா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
----
Reporter : S. PONSINGH_Staff Reporter Location : Vellore - VELLORE