சென்னிமலை ரோடு-சாஸ்திரிநகர் ரவுண்டானா விரிவாக்கம் செய்ய ரூ.1 கோடியே 80 லட்சம் ஒதுக்கீடு- நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தகவல்
சென்னிமலை ரோடு-சாஸ்திரி நகர் ரவுண்டானா விரிவாக்கம் செய்ய ரூ.1 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறி உள்ளார்.
சென்னிமலை ரோடு-சாஸ்திரி நகர் ரவுண்டானா விரிவாக்கம் செய்ய ரூ.1 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறி உள்ளார்.
சாஸ்திரி நகர் மேம்பாலம்
ஈரோடு மாவட்டத்தின் மிக முக்கிய ரோடுகளில் ஒன்று ஈரோடு -சென்னிமலை ரோடு. ஈரோடு மாநகர் ரெயில் நிலையத்தில் இருந்து ரங்கம்பாளையம், சுற்றுவட்டச்சாலை, வெள்ளோடு, பெருந்துறை ரெயில் நிலையம் வழியாக இந்த ரோடு செல்கிறது. இது எப்போதும் பரபரப்பும், போக்குவரத்து நெரிசல் மிகுந்தும் காணப்படும்.
இந்த ரோட்டில் ஈரோடு மாநகராட்சி பகுதியிலேயே சாஸ்திரிநகர் ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் இணைப்பு சாலை சரியாக இல்லை. எனவே ஈரோட்டில் இருந்து சாஸ்திரி நகர் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இணைப்பு பாலம் கோரிக்கை
குறிப்பாக பாலத்தையொட்டியே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. 3 பணிமனைகள் ஒரே இடத்தில் இயங்கி வருவதால் தினமும் பணிமனைக்கு வரும் அனைத்து பஸ்களும் இங்கு நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இந்த காரணங்களால், சாஸ்திரி நகர் ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து ஈரோடு சாலையை இணைக்கும் வகையில் இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக வாகன ஓட்டிகளின் பேட்டியுடன் கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதி 'தினத்தந்தி' யில் செய்தி கட்டுரை வெளியிடப்பட்டது.
கலெக்டர் உத்தரவு
இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கோட்டப்பொறியாளர் அ.மாதேஸ்வரன் ஒரு விளக்க அறிக்கையை மாவட்ட கலெக்டருக்கும், சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு தலைமை பொறியாளருக்கும் அனுப்பி உள்ளார்.
ரூ.1 கோடியே 80 லட்சம்
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய சாலையாக ஈரோடு-சென்னிமலை ரோடு உள்ளது. இங்கு ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் மூலம் சாலை சந்திப்பு மேம்பாட்டு பணிக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் முடிவு பெற்று பணிகள் தொடங்கி உள்ளன. மேலும், சாலை சந்திப்பு மேம்பாட்டு பணிக்காக ரோடு அகலப்படுத்தவும், மழைநீர் வடிகால் அமைக்கவும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
மேம்பாலத்தின் அணுகு சாலையில் வாகனங்கள் குழப்பமின்றியும,் பாதுகாப்பாகவும் செல்ல சாலை சந்திப்பு வடிவமைப்பு (ரவுண்டானா) நெடுஞ்சாலைத்துறையின் சாலை பாதுகாப்பு அலகு அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு இருக்கிறது.
நிரந்தர கட்டமைப்பு
இங்கு பரீட்சார்த்த முறையில் தற்காலிக தடுப்புகள் மூலம் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இங்கு நிரந்தர கட்டமைப்பு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அந்த விளக்க அறிக்கையில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு கோட்டப்பொறியாளர் அ.மாதேஸ்வரன் கூறி உள்ளார்.
ஆனால், பரீட்சார்த்த முறையில் தற்காலிக ரவுண்டானா அமைக்கப்பட்ட பிறகும், இங்கு போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுவதை தடுக்கவே ஈரோடு சாலையில் இருந்து மேம்பாலத்துக்கு இணைப்பு பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.