'ஹெல்மெட்' அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக ரூ.1,000 அபராதம்
‘ஹெல்மெட்’ அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக ரூ.1,000 அபராதம்
நாகையில், 'ஹெல்மெட்' அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வந்த வினோத குறுந்தகவலால் ஆட்டோ டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்துள்ளார்.
ஆட்டோ டிரைவருக்கு அபராதம்
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் 'ஹெல்மெட்'(தலைக்கவசம்) அணிவது கட்டாயம். 'தலைக்கவசம் உயிர்க்கவசம்' என்றெல்லாம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நகரின் பல முனைகளில் நின்றபடி போலீசார் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் 'ஹெல்மெட்' அணிந்துள்ளனரா? என கண்காணித்து வருவதும், அணியாதவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிப்பதும் தொடர்ந்து நடக்கிறது.
சில நேரங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டு 'ஹெல்மெட்' அணியாதவர்களுக்கு அபராதம் விதித்து அதற்கான குறுந்தகவலை சம்பந்தப்பட்டவர்களின் செல்போனுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இந்த நிலையில் 'ஹெல்மெட்' அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக நாகையை சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு ரூ.1,000 அபராதம் விதித்து அனுப்பப்பட்ட வினோத குறுந்தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
குறுஞ்செய்தி
நாகூர் சிவன் கோவில் வடக்கு வீதியை சேர்ந்தவர் சாகுல் அமீது. ஆட்டோ டிரைவர். கடந்த 1-ந் தேதி சாகுல் அமீது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. அதில் அவருடைய ஆட்டோ பதிவு எண்ணை குறிப்பிட்டு, 'ஹெல்மெட்' அணியாமல் சென்றதாக வாய்மேடு போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்து இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இதை படித்த அவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில் 'ஹெல்மெட்' அணியாத ஆட்டோ டிரைவருக்கும் அபராதமா? என அவர் குழப்பம் அடைந்தார்.
போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
இதுகுறித்து சாகுல் அமீது நேற்று போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்கிடம் நேரில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர்,
'TN 51 AR 5751 என்ற பதிவு எண் கொண்ட எனது சொந்த ஆட்டோவை 'ஹெல்மெட்' அணியாமல் இயக்கியதால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டதாக எனது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது.
'ஹெல்மெட்' அணியாமல் சென்றதாக ஆட்டோவுக்கு அபராதம் விதித்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராத தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்' என கூறி இருந்தார்.
சர்ச்சை
நாகையில் 'ஹெல்மெட்' அணியாமல் ஆட்டோ ஓட்டியதாக டிரைவருக்கு போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.