மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.106 கோடி கடன்உதவி
விழுப்புரம் மாவட்டத்தில் 1,020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.106 கோடி மதிப்பிலான கடன் உதவியை கலெக்டர் மோகன் வழங்கினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 1020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.106.37 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் கலெக்டர் மோகன் பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 129 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இந்த மகளிர் சுய உதவிக்குழுக்களில் 2 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மகளிர் சுய உதவிக்குழுவால் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெண்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்துள்ளார்கள். இதனால் பெண்கள் சுயமரியாதையோடு வாழ்ந்து வருகிறார்கள்.
ரூ.106.37 கோடி கடன்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1020 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.106.37 கோடி மதிப்பிட்டில் கடனுக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த கடனுதவி பெற்ற அனைவரும் தொழில் செய்து வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்வதோடு, பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்று, நம் நாட்டிற்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சித்ரா விஜயன், தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரா இயக்க திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயசந்திரன், விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ஷீலா சேரன் உள்பட பலா் கலந்து கொண்டனர்.