திருநங்கைகள் சுயதொழில் செய்ய ரூ.15 லட்சம் மானியம்


திருநங்கைகள் சுயதொழில் செய்ய ரூ.15 லட்சம் மானியம்
x

குமரி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய 30 திருநங்கைகளுக்கு ரூ.15 லட்சம் மானிய தொகை முதல்-அமைச்சரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய 30 திருநங்கைகளுக்கு ரூ.15 லட்சம் மானிய தொகை முதல்-அமைச்சரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் வழங்கினார்.

தொழில் செய்ய மானியம்

குமரி மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். அந்த வகையில் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 340 கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார். பின்னர் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் 30 திருநங்கைகளுக்கு சொந்தமாக சுயதொழில் செய்ய மானியத் தொகையை கலெக்டர் அரவிந்த் வழங்கினார். அந்த வகையில் மொத்தம் ரூ.15 லட்சம் மானியத் தொகை வழங்கப்பட்டது. இதே போல வருவாய்துறை சார்பில் ஒரு நபருக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணையை வழங்கினார்.

கோரிக்கை மனுக்கள்

பின்னர் அவர் பேசியபோது, "முதல்-அமைச்சரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்வு வாரமானது இன்று (செவ்வாய்க்கிழமை) தோவாளை தாசில்தார் அலுவலகம், அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், நாளை (புதன்கிழமை) அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகம், ராஜாக்கமங்கலம் மற்றும் குருந்தன்கோடு வட்டார வளர்ச்சி அலுவலத்திலும், 22-ந் தேதி கல்குளம் தாசில்தார் அலுவலகம், தக்கலை மற்றும் திருவட்டார் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 23-ந் தேதி கிள்ளியூர் மற்றும் திருவட்டார் தாசில்தார் அலுவலகம், கிள்ளியூர் மற்றும் மேல்புறம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், 24-ந் தேதி விளவங்கோடு தாசில்தார் அலுவலகம், முன்சிறை வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்" என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, தனித்துணை கலெக்டர் திருப்பதி, மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story